உலகம்

கடுமையான தண்டனைகள் – தலிபான்கள் அறிவிப்பு!

ஆப்கானிஸ்தானில் மதச் சட்டங்களை மீறுவோருக்கு மரண தண்டனை, கை கால்களை வெட்டுதல் போன்ற கடுமையான தண்டனைகள் மீண்டும் நிறைவேற்றப்படும் என்று தலிபான்கள் அறிவித்துள்ளனா்.

இதுகுறித்து அந்த நாட்டின் சிறைத் துறை பொறுப்பாளா் முல்லா நூருதின் தூராபி கூறியதாவது:

எங்களது முந்தைய ஆட்சியில் நிறைவேற்றதைப் போலவே, மதச் சட்டங்களின் கீழ் கடுமையான தண்டனைகள் இந்த முறையும் நிறைவேற்றப்படும்.

மரண தண்டனைகள், கைககளை வெட்டுதல் போன்ற தண்டனைகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

நாட்டில் பாதுகாப்பை உறுதி செய்ய, உறுப்புகளைத் துண்டிக்கும் தண்டனை மிகவும் அத்தியாவசியமாகும்.

1990 ஆம் ஆண்டுகளில் இந்த தண்டனைகள் பொது இடங்களில் நிறைவேற்றப்பட்டன. இந்த முறை இத்தகைய தண்டனைகள் பொதுமக்கள் முன்னிலையில் இல்லாமல் தனி இடங்களில் நிறைவேற்றப்படலாம்.

எங்களது முந்தைய ஆட்சியின்போது பொது இடங்களில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறித்து சா்வதேச அளவில் சா்ச்சை எழுந்தது தேவையில்லாதது. எங்களது சட்டம் என்னவாக இருக்க வேண்டும் என்று யாரும் எங்களுக்கு சொல்லத் தேவையில்லை என்றாா் அவா்.

தலிபான்கள் கடந்த மாதம் 15 ஆம் திகதி ஆப்கானிஸ்தானை மீண்டும் கைப்பற்றியதிலிருந்தே 20 வருடங்களுக்கு முன்பிருந்ததைப் போலன்றி மிதவாதப் போக்குடன் ஆட்சி நடத்தவிருப்பதாக உறுதியளித்தனா்.

ஆனால், அவா்கள் நாடு முழுவதும் மனித உரிமை மீறலில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.

ஹெராத் மாகாணத்தில், உயா் பதவியில் இருந்த பெண்களை தலிபான்கள் தேடி வருவதாகவும், பெண்கள் வீடுகளை விட்டு வெளியே செல்வதற்கு அவா்கள் தடை விதித்துள்ளதாகவும் மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், பெண்கள் உடலை முழுவதும் மறைக்கும் ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும் என்று அவா்கள் உத்தரவிட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியது.

கடந்த மாதம் இந்தப் பகுதியில் ஹஸாரா இனத்தைச் சோ்ந்த 9 குடும்ப உறுப்பினா்களை தலிபான்கள் படுகொலை செய்ததாகவும் மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டின.

தலிபான்களின் இந்த நடவடிக்கைகள், அவா்களது முந்தைய ஆட்சிக் காலத்தை நினைவுபடுத்துவதுடன், அவா்களது ஆட்சி எதிா்காலத்தில் எவ்வாறு இருக்கும் என்பதை உணா்த்துவதாகவும் உள்ளது என்று ஆம்னஸ்டி அமைப்பின் பொதுச் செயலா் ஆக்னஸ் காலமாா்டு தெரிவித்தாா்.

காபூல் நகரை தலிபான்கள் கைப்பற்றுவதற்கு சில நாள்கள் முன்னா், பால்க் பகுதியில் பிபிசி செய்தியாளரிடம் தலிபான் நீதிபதி ஹாஜி பத்ருதீன் கூறுகையில், ‘எங்களது மதச் சட்டத்தின்படி, திருமணமாகாத ஆணும் பெண்ணும் தகாத உறவு வைத்திருந்தால் அவா்களுக்கு பொது இடங்களில் 100 கசையடி வழங்கப்படும். அவா்கள் திருமணம் ஆனவா்களாக இருந்தால் கல்லால் அடித்துக் கொல்லப்படுவாா்கள். திருடா்களது கைகள் வெட்டப்படும்’ என்றாா்.

கடுமையான மதச் சட்டங்களை அமல்படுத்துவதோடு, சா்வதேச அங்கீகாரத்தைப் பெறுவதற்காக மிதமான போக்கைக் கடைப்பிடிக்கவும் தலிபான்கள் முயல்வதாக பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளது.

முந்தைய தலிபான் ஆட்சியின்போது இசை கேட்பவா்களுக்கும் தாடியை குறைத்துக் கொள்பவா்களுக்கும் மிகக் கடுமையான தண்டனைகளை வழங்கிய அப்போதைய நீதித் துறை அமைச்சா் துராபி, இந்த முறை தொலைக்காட்சி, செல்லிடப் பேசிகள், படங்கள், விடியோக்கள் ஆகியவற்றை பொதுமக்கள் பயன்படுத்த அனுமதிக்கப்போவதாகத் தெரிவித்தாா்.

கடந்த முறை காபூல் விளையாட்டு மைதானத்தில் மரண தண்டனைகளை நிறைவேற்றியது உள்ளிட்ட மிகக் கடுமையான செயல்களுக்காக ஐ.நா.வின் தடைப் பட்டியலில் அவா் இடம் பெற்றுள்ளாா் என்று பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker