கடல் சீற்றம் காரணமாக திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கடற்கரை பிரதேசங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகள், வலை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் பெரும் நாசம்!

வி.சுகிர்தகுமார்
கடல் அலையின் சீற்றம் காரணமாக திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட விநாயகபுரம் 3, 4ஆம் பிரிவின் கடற்கரை பிரதேசங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் வலை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களும் நாசமாக்கப்பட்டுள்ளன.
கடந்த சில தினங்களாக நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை மற்றும் தாழமுக்கம் காரணமாகவே இந்நிலை உருவாகியுள்ளது.
இதன் காரணமாக சுமார் 25 இற்கும் மேற்பட்ட மீன்பிடி வள்ளங்கள் கடலலையால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட பெறுமதியை உடைய வலை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களும் நாசமாக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு பாதிக்கப்பட்ட பிரதேசங்களை பார்வையிட திருக்கோவில் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன் உள்ளிட்ட பிரதேச செயலக அதிகாரிகள் இன்று கள விஜயமொன்றை மேற்கொண்டனர்.
களவிஜயத்தினை மேற்கொண்ட அவர்கள் பாதிக்கப்பட்ட இடத்தினை பார்வையிட்டதுடன் மீன்பிடி படகுகள் சேதமாக்கப்பட்டுள்ளதையும் வலை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் கடலலையில் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளதையும் நேரில் அவதானித்தனர்.
இதன் பின்னர் கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர் பாதிக்கப்பட்ட மீன்பிடி வள்ளங்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்வதற்கான முதற் கட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக வாழ்வதாரத்தை இழந்துள்ள மீனவர்களுக்கு அரசாங்க அதிபர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினூடாக இழப்பீட்டை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.