முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான விவாதம் இன்று

நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.
அதேநேரம் எதிர்க்கட்சியின் பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியெல்லவின் கோரிக்கைக்கு அமைய நாளை நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கும் எதிர்கட்சியினால் முன்வைக்கப்படும் சபை ஒத்திவைப்பு பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவும் நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு தீர்மானித்துள்ளது.
அதன்படி, 2020ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் தொடர்பான வாசிப்பு மற்றும் குழுநிலை விவாதம் என்பன மாத்திரமே இன்றையதினம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதியபோசன இடைவேளை இன்றி 2020ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் தொடர்பாக முற்பகல் 10.00 மணிமுதல் பிற்பகல் 5.00 மணிவரை விவாதம் இடம்பெறவுள்ளது.
இதேநேரம், எதிர்கட்சியினரால் முன்வைக்கப்படும் சபை ஒத்திவைப்பு பிரேரணை தொடர்பான விவாதம் நாளை முற்பகல் 10.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணிவரை இடம்பெறவுள்ளது.
இதேவேளை, அடுத்த வருடத்திற்கான பாதீட்டின் மீதான விவாதத்தை 20 நாட்களுக்குள் மட்டுப்படுத்த நேற்று இடம்பெற்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.