ரஷ்யாவின் விரைவான கொவிட்-19 தடுப்பூசி முயற்சியால் ஆபத்து நேரலாம்!

உலகில் முதன் முதலாக கொவிட்-19 தடுப்பூசியை கண்டுபிடித்த பெருமையைப் பெற தீவிரமாக செயற்பட்டுவரும் ரஷ்யாவின் முயற்சியால், ஆபத்து நேரலாம் என ஜோர்ஜ் டவுன் பல்கலைகழக சுகாதார வல்லுனர், லாரன்ஸ் கோஸ்டின் எச்சரித்துள்ளார்.
மூன்றாம் கட்ட ஆய்வை மேற்கொள்ளாமல், தடுப்பூசி மருந்து தயாரிக்க அனுமதி அளிப்பது ஆபத்தானது என அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘ரஷ்யா, விதிமுறைகளை பின்பற்றாமல், கொரோனா தடுப்பூசியை வெளியிடுவதால் எந்த பயனும் இருக்காது. மாறாக, சுகாதார சீர்கேடு தான் ஏற்படும். ஆய்வு முடிவுகள் வந்த பின் தான், தடுப்பூசி மருந்தின் தன்மை தெரியும்’ என கூறினார்.
சர்வதேச அளவில், தன் மதிப்பை உயர்த்திக் கொள்ள திட்டமிட்டுள்ள ரஷ்யா, கொவிட்-19 தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்து விட்டதாக அறிவித்துள்ளது.
ரஷ்யாவின் கமாலியா ஆய்வு மையம், மனிதர்களிடம், இரு கட்டங்களாக தடுப்பூசி மருந்தை செலுத்தி சோதனை செய்ததாக தெரிவித்துள்ளது.
ஆனால் இம்மையம், மூன்றாம் கட்ட சோதனையை மேற்கொள்வதற்கு முன், கொவிட்-19 தடுப்பூசி மருந்தை தயாரித்து, சந்தைப்படுத்த, ஓரிரு நாட்களில் அனுமதி வழங்கப்படும் என, தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, செப்டம்பரில் தடுப்பூசி தயாரித்து, ஒக்டோபரில் விற்பனைக்கு கொண்டு வர, ரஷ்யா திட்டமிட்டுள்ளது.
கமாலியா ஆய்வு மையம், இரு மாதங்களுக்கு முன், ஒரு டசனுக்கு மேற்பட்டோரிடம் முதற்கட்ட பரிசோதனையை மேற்கொண்டது. அதன் முடிவையும், ஆதாரங்களையும், ரஷ்யா இதுவரை வெளியிடவில்லை.
இரண்டாம் கட்ட ஆய்வுக்கு ரஷ்ய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, இராணுவத்தினர் உட்பட, 76 பேருக்கு, தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டது. அதன் முடிவையும், ஆதாரங்களையும், ரஷ்யா இதுவரை வெளியிடவில்லை.