தமிழ் புத்தாண்டின் பின்னர் ஊரடங்கு தளர்த்தப்படும்?

இலங்கையில் குறைந்தளவான வைரஸ் பாதிப்புகள் உள்ள இடங்களில் தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் ஊரடங்கு உத்தரவினை தளர்த்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அதுவரை நடைமுறையில் உள்ள ஊரடங்கு அமுலில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தினால் ஊரடங்கு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், இலங்கையில் அதி அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்ட சில மாவட்டங்களை தவிர ஏனைய மாவட்டடங்களில் கொரோனா வைரஸ் பரவல் அபாயம் குறைவாகவே காணப்படுகிறது.
ஆகவே, குறித்த மாவட்டங்களில் எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன. எனினும் தற்போது நடைமுறையில் உள்ள தடைகள் மட்டும் கட்டுப்பாடுகள் குறித்த காலப்பகுதி வரை நீடிக்கும்.
அதன் பின்னர் மேலதிக ஆய்வுகளை தொடர்ந்து அடுத்த கட்டத்துக்கான முடிவுகள் எடுக்கப்படும்.
இலங்கையின் சில மாவட்டங்களுக்கு ஏறக்குறைய மூன்றில் இருந்து நான்கு நாட்கள் இடைக்கிடையே தளர்த்தப்பட்ட நிலையில் ஊரடங்கு தொடர்கின்றது.
அதேவேளை இலங்கையின், கொழும்பு கம்பஹா புத்தளம் கண்டி மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட சில மாவட்டங்கள் அபாய வலயங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. குறித்த மாவட்டங்களில் இருந்து ஏனைய மாவட்டங்களுக்கான பயணங்கள் உள்ளிட்ட சில நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான செயற்குழு கூட்டம் ஒன்று நேற்று நடைபெற்றது.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில், சுகாதார மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த விடயம் கலந்தாலோசிக்கப்பட்டு இது தொடர்பான அவதானங்களை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.