எரிபொருள் விலையை குறைக்க முடியாது – அரசாங்கம்!

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை சடுதியாக குறைவடைந்துள்ள போதிலும், நாட்டில் எரிபொருள் விலையை குறைக்க முடியாது என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘கடந்த இரண்டு மாதகாலமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவியது. அப்போது பத்து ரூபாவாலேனும் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டியிருந்தது.
ஆனால் நாம் அந்த சுமையை மக்களுக்கு கொடுக்கவில்லை. இப்போது எரிபொருள் விலை குறைவடைந்துள்ளமை உண்மையே. அதுவும் சவுதி அரேபியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாக ஏற்பட்டுள்ளது.
இந்த முரண்பாட்டு நிலைமைகள் எவ்வளவு காலம் நீடிக்கும் என எவராலும் கூற முடியாது. அவ்வாறு இருக்கையில் சற்று பொறுமையாக நாம் இந்த விவகாரங்களை வேடிக்கை பார்க்க வேண்டியுள்ளது.
இந்த விலை குறைப்புகள் தற்காலிகமானதா அல்லது நிரந்தரமானதா என்பதை அவதானித்த பின்னரே எம்மால் தீர்மானம் ஒன்றினை எட்ட முடியும்.
அதுமட்டுமல்ல இன்று இலங்கை மின்சார சபை 100 மில்லியன் ரூபாய் நட்டத்தில் இயங்குகின்றது. கடந்த 2014ஆம் ஆண்டில் இலாபத்தில் இயங்கிய இலங்கை மின்சார சபை இப்போது நட்டத்தில் இயங்குகின்றது.
அதேபோல் அரசாங்கம் 14 பில்லியன் ரூபாய்கள் நட்டத்தில் இயங்கிக்கொண்டுள்ளது. இந்த நெருக்கடிகளையும் நாம் கவனத்தில் கொண்டே தீர்மானம் எடுக்க வேண்டும்.
இன்றைய காலநிலை காரணமாக நீர் மட்டங்கள் வற்றியுள்ளன. மின்சாரம் உற்பத்திக்காக நீர்வளம் இல்லை. எனவே எரிபொருள் அதிகளவில் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
எவ்வாறு இருப்பினும் இப்போது உலக சந்தையில் மசகு எண்ணையின் விலை குறைவடைந்துள்ள நிலையில் இலங்கையில் எரிபொருள் விலையை குறைக்க முடியுமா என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றோம்.
வெகு விரைவில் விலைகளில் மாற்றத்தை கொண்டுவர முடியும் என நம்புகின்றோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.