கொரோனாவில் இருந்து மீண்டு வருவேன் – அமெரிக்க ஜனாதிபதி
இராணுவ வைத்தியசாலையில் கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நான் நன்றாக இருக்கிறேன் விரைவில் திரும்பி வருவேன் என்று கூறி காணொலியொன்றை வெளியிட்டுள்ளார்.
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் தாக்குதலுக்கு அமெரிக்க வல்லரசின் ஜனாதிபதி ட்ரம்பும் உள்ளாகியுள்ளார். 74 வயதான அவருக்கும் 50 வயதான அவருடைய மனைவி மெலனியாவுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கடந்த முதலாம் திகதி உறுதியானது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் மாதம் 3ஆம் திகதி நடக்கவுள்ள நிலையில், இந்த விடயம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
முதலில் வொஷிங்டன் வெள்ளை மாளிகையில் சிகிச்சைப் பெற்ற ட்ரம்ப், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 2ஆம் திகதி பெதஸ்தாவில் உள்ள வால்டர் ரீட் இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இந்த நிலையில் அவர் இன்று (திங்கட்கிழமை) காலை வைத்தியசாலையில் இருந்து தனது ருவிட்டரில் காணொலியொன்றை பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில், வைத்தியசாலையில் பணியாற்றும் தாதிகள், வைத்தியர்கள், இராணுவத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எவ்வாறான யூகங்கள் கூறப்பட்டாலும் தான் கொரோனாவில் இருந்து மீண்டு வருவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிலும், உலகமெங்கும் உள்ள மக்களுக்கும் அவர்களது ஆதரவு வார்த்தைகளுக்காகவும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உடல்நிலை மேம்பட்டு வருவதாக அவரது மருத்துவக் குழு தெரிவித்தது.
இந்த நிலையில் அவரை இன்று மருத்துவமனையில் இருந்து வெளியேற்றலாம் எனவும் மருத்துவக் குழு நேற்று அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.