ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் எமது பிரதேச மக்களின் இன்றைய நிலை……

வி.சுகிர்தகுமார்
நாட்டில் இன்று மாலை முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் எமது அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச மாக்கள் பொருட்கொள்வனவில் அதிக ஆர்வம் காட்டுவதை காணக்கூடியதாக இருந்தது.
இன்று காலை அரசாங்கத்தினால் இத்தகவல் வெளியிடப்பட்ட நிலையில் வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையே மக்கள் அதிகமாக கொள்வனவு செய்து இருந்தனர். ஆயினும் பல வியாபார நிலையங்களில் மரக்கறி உள்ளிட்ட பொருட்கள் இல்லாத நிலை உருவாகி இருந்தது.
இதேநேரம் அரச சத்தோச நிலையங்களிலும் பொருட்கொள்வனவிற்காக மக்கள் அலைமோதியத்தையும் மேலும் அங்கும் சில பொருட்களுக்கு தட்டுப்படும் நிலவியது.
அதிகமான வெப்பநிலை நிலவுகின்ற இச்சந்தர்ப்பத்தில் அக்கரைப்பற்று மத்திய சந்தைப்பகுதியில் வெள்ளரிப்பழக் கொள்வனவிலும் மக்கள் ஈடுபட்டு வந்தமையினையும் அவதானிக்க முடிந்தது.
போக்குவரத்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில்
இடம்பெற்றபோதும் பயணிகள் அதிகமின்றி பஸ் தரிப்பிட நிலையம் வெறிச்சோடிக்காணப்பட்டன.
அதிகமான மக்கள் முன்னெச்சரிக்கையுடன் முகக்கவசங்களை அணிந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இது இவ்வாறிருக்க இந்து இளைஞர் மன்றம் உள்ளிட்ட சில சமூக அமைப்புக்களும் நலன்விரும்பிகளும் முகக்கவசங்களை பெற்றுக்கொள்ள முடியாத வருமானம் குறைந்த மக்களுக்கு முகக்கவசங்களை பெற்றுக்கொடுக்க முன்வந்தமையும் வரவேற்கத்தக்கதாக இருந்தது.