வாழ்வியல்

உறங்கும்போது எப்படிப் படுக்க வேண்டும்?

நாள் முழுவதும் இயங்கும் உடலுக்கு இரவில் ஓய்வளிப்பது அவசியம். அந்தவகையில் சராசரியாக ஒவ்வொரு மனிதனுக்கும் நாள் ஒன்றுக்கு 7 முதல் 8 மணி நேரம் தூக்கம் அவசியம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

உடல் உறுப்புக்கள் புத்துணர்வு அடைய, மன அழுத்தத்தைக் குறைக்க, நினைவுத்திறன் மேம்பட ஒவ்வொருவருக்கும் தினசரி தூக்கம் அவசியம். இரவில் ஆழ்ந்து தூங்குபவர்களின் நினைவுத்திறன் அதிகரிக்கிறது என்றும் மன அழுத்தம் குறைய ஆழ்ந்த தூக்கம் பெறுங்கள் என்றும் பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

அதுபோல எந்தவொரு கடினமான செயலை செய்வதற்கு முன்னர் ஒரு அரை மணி நேரம் தூங்கிவிட்டு செய்யும்போது மிகச்சிறப்பாக செய்து முடிக்க முடிகிறது என்பதும் ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

முந்தைய இரவு உறக்கத்தைப் பொருத்தே அடுத்த நாளின் செயல்திறன் நிர்ணயிக்கப்படுவதால் உடலுக்கு தூக்கம் தவிர்க்க முடியாதது. ஆனால், எந்த நிலையில் தூங்கினால் உடல்நலனுக்கும் மனநலனுக்கும் நல்லது என்பது முக்கியமானது.

ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதத்தில் உடலமைப்பு, உடலளவு இருப்பதால் அவரவர்களின் வசதிக்கேற்ப தூங்குவதுண்டு. ஆனால் தவறான நிலையில் தூங்குவது உடலில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும்.

உங்களுடைய முதுகெலும்பை சரியாக சீரமைக்கும் நிலையில் தூங்குவதன் மூலம் மட்டுமே தூக்கம் மேம்படும். உடலில் எவ்வித பிரச்னைகளும் ஏற்படாது. முதுகு மற்றும் கழுத்துப் பகுதியின் சீரமைப்பு கெடாதவாறு தூங்க வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர் நிபுணர்கள்.

தூங்கும் முறைகளில் எது மோசமானது, எது சிறந்தது என்பது குறித்துப் பார்க்கலாம்.

தூங்குவதில் மிக மோசமான நிலை

இரவில் குப்புறப்படுத்து தூங்கினால்தான் நன்றாக தூக்கம் வரும் என்று கூறுபவர்கள் பலர். ஆனால், இவ்வாறு தூங்குவது மிகவும் மோசமான நிலை. இது உங்களுடைய உடல் எடையை அதிகரிக்கிறது. பாலினம், வயது, பிஎம்ஐ மற்றும் புகைபிடித்தல் ஆகிய காரணிகளும் தூக்கத்தின்போதான உடல் இயக்க அளவுகளை தீர்மானிக்கின்றன.

நெஞ்செரிச்சல் அல்லது இரைப்பை உணவுக்குழாயில் பிரச்னை உள்ளவர்கள் குப்புறப்படுத்து தூங்குவதால் வயிற்றில் வீக்கம் ஏற்படும். இதுபோன்ற பிரச்னை இருப்பவர்கள் குப்புறப்படுத்து தூங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இவ்வாறு தூங்குவதால் தசை தொனி, குறிப்பாக கழுத்துப் பகுதியில் தசை சமநிலையற்று காணப்படும். இது நாள்பட்ட கழுத்து மற்றும் முதுகு வலியை ஏற்படுத்தும்.

காலையில் நீங்கள் எழும்போது முதுகுப் பகுதி படுக்கையில் படுமாறு ஒருமுறை உருண்டு பின்னர் 10 நிமிடங்கள் ஓய்வெடுத்த பின்னர் எழுந்திருப்பது நலம்.

தூங்குவதில் சிறந்த நிலை:

முதுகு படுக்கையில் படும்படி கிடைமட்டமாக படுத்துத் தூங்குவது முதுகெலும்பை சரியான நிலையில் பராமரிக்கிறது. இது கீழ் முதுகு மற்றும் கழுத்துத் தசைகள் இரண்டையும் தளர்த்தும்.

இவ்வாறு தூங்கும்போது கூடுதலாக முழங்கால்களுக்கு கீழே ஒரு தலையணையை வைக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இப்படி செய்யும்போது கீழ் முதுகில் அழுத்தத்தைக் குறைக்க உதவும். தலைக்கு வைக்கப்படும் தலையணை மெல்லியதாக உடலை சமநிலையில் வைக்கக்கூடிய அளவுக்கு இருக்க வேண்டும்.

தூங்கும்போது மூச்சுத்திணறல் உள்ளவர்கள் மற்றும் குறட்டை விடுபவர்கள் இந்த நிலையை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இம்முறையில் தூங்கும்போது நாக்கு பின்னோக்கி சென்று சுவாசப்பாதைகளை தடுக்கலாம். வயிற்றில் இருக்கும் அமிலம் கிடைமட்டமாக இருக்கும்போது உணவுக்குழாயில் சில பிரச்னைகள் ஏற்படும். எனவே, அவ்வாறு தொந்தரவு இருப்பவர்கள், பக்கவாட்டில் தூங்கவோ அல்லது சற்று உயரமான தலையணையை வைத்து கிடைமட்டமாக படுத்துறங்குவது இதனை சரிசெய்யும்.

தூங்குவதில் மிகச்சிறந்த நிலை:

பெரும்பாலான மக்கள் பக்கவாட்டில் தூங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதயத்தில் அழுத்தம் ஏற்படுவதைத் தவிர்க்க வலது பக்கவாட்டில் தூங்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

இதற்காக உங்கள் கால்களை நீட்டி, தலையணையில் தலை நடுநிலையில் நேராக இருக்க வேண்டும். இதுதவிர, கால்களுக்கு இடையில் மற்றொரு தலையணையை வைத்து தூங்குவது இடுப்பு மற்றும் முதுகெலும்பை சீரமைப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் தூங்குவது ஒரு நிம்மதியான தூக்கத்தைத் தருவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மெல்லிய மெத்தை, தலையணையை உபயோகித்தால் தோள்பட்டை அல்லது கழுத்து வலி ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் எப்போதும் வலது பக்கவாட்டில் தூங்குவதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker