சுவாரசியம்

500 ரூபாயை வைத்துக் கொண்டு லம்போர்கினி கார் வாங்கப் போன சிறுவனுக்கு அடித்த அதிர்ஷ்டம்!!

 

கையில் வெறும் 500 ரூபாய் வைத்து கொண்டு, பல கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போர்கினி காரை வாங்க சென்ற 5 வயது சிறுவனுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

 

லம்போர்கினி (Lamborghini) நிறுவனத்தின் விலை உயர்ந்த கார்களுக்கு, உலகின் பல்வேறு நாடுகளில், பல கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். வாழ்க்கையில் ஒரு லம்போர்கினி காரையாவது வாங்க வேண்டும் என்பது அவர்களின் வாழ்நாள் லட்சியமாக இருந்து வருகிறது.

ஆனால் லம்போர்கினி கார்களின் அதிகப்படியான விலை காரணமாக அனைவராலும் அந்த கனவை நிறைவேற்ற முடிவதில்லை. ஆனால் வெறும் 3 அமெரிக்க டாலர்களை மட்டும் வைத்து கொண்டு லம்போர்கினி காரை வாங்க சென்ற 5 வயது சிறுவன்தான் கார் ஆர்வலர்கள் மத்தியில் இன்றைய ஹாட் டாபிக்.

 

3 அமெரிக்க டாலர்கள் என்பது இலங்கை மதிப்பில் 500 ரூபாய்தான். இந்த பணத்தை கையில் வைத்து கொண்டு, பல கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போர்கினி காரை வாங்க அந்த சிறுவன் புறப்பட்டுள்ளான்.

அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் உள்ள ஆக்டன் நகரத்தில் இந்த வினோதமான சம்பவம் நடந்துள்ளது. இதில், ஆச்சரியப்பட வைக்கும் பல விஷயங்கள் இன்னும் அடங்கியுள்ளன. ஏனெனில் லம்போர்கினி காரை வாங்குவதற்கு, தனது அம்மாவின் மெர்சிடிஸ் பென்ஸ் காரை எடுத்து கொண்டு அந்த சிறுவன் புறப்பட்டுள்ளான்.

 

5 வயது சிறுவன் கார் ஓட்டுவதே பெரிய ஆச்சரியம்தான். அந்த சிறுவனுக்கு லம்போர்கினி கார்கள் என்றால், மிகவும் பிடிக்கும். எனவே லம்போர்கினி கார் வாங்கி தரும்படி தனது பெற்றோரிடம் நீண்ட காலமாக அந்த சிறுவன் அடம்பிடித்து வருவதாக கூறப்படுகிறது.

 

இப்படிப்பட்ட சூழலில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் தனது பெற்றோரிடம் அடம்பிடித்துள்ளார். இம்முறையும் அவர்கள் லம்போர்கினி காருக்கு ‘நோ’ சொல்லவே, தனது அம்மாவின் பென்ஸ் காரை எடுத்து கொண்டு வீட்டில் இருந்து கிளம்பி விட்டான் அந்த சிறுவன்.

 

உட்டாவில் இருந்து கலிபோர்னியாவிற்கு சென்று லம்போர்கினி காரை வாங்க வேண்டும் என அந்த சிறுவன் திட்டமிட்டிருந்தான். ஆனால் வீட்டில் இருந்து புறப்பட்ட உடனேயே அந்த சிறுவனின் திட்டம் கலைந்து விட்டது.

 

ஏனெனில் வழியில் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் அந்த சிறுவனை மடக்கி பிடித்து விட்டனர். ஆனால் 5 வயது சிறுவன் கார் ஓட்டி வந்ததை பார்த்து, அவர்கள் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தனர். அத்துடன் லம்போர்கினி கார் வாங்க செல்கிறேன் என அந்த சிறுவன் சொன்ன காரணமும், அவர்களை வியப்பில் ஆழ்த்தியது.

இதன்பின் இந்த செய்தி உலகம் முழுக்க காட்டு தீயாய் பரவியது. எனவே அந்த சிறுவனுக்கு எதிராக பலர் கருத்து தெரிவித்தனர். அந்த சிறுவன் தண்டிக்கப்பட வேண்டும் என ஒரு சிலர் வலியுறுத்தினர். ஆனால் லம்போர்கினி கார்கள் மீது காதல் கொண்ட அந்த சிறுவனுக்கு தற்போது பெரிய சர்ப்ரைஸ் ஒன்று கிடைத்துள்ளது.

 

ஆம், அவனது ட்ரீம் காரில் ரைடு சென்று வரும் அதிர்ஷ்டம் அவனுக்கு வாய்த்துள்ளது. உட்டா நகரை சேர்ந்த ஒருவர் அந்த சிறுவனுக்கு இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்துள்ளார். இந்த சிறுவனின் செயல்பாடு ஈர்க்கும் வகையில் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

 

ஜெர்மி நெவ்ஸ் என்ற கார் ஆர்வலர்தான் அந்த சிறுவனுக்கு லம்போர்கினி காரில் ரைடு செல்லும் வாய்ப்பை வழங்கியுள்ளார். ஏராளமானோர் அந்த சிறுவனுக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் நிலையில், ஜெர்மி நெவ்ஸ்ஸோ அந்த சிறுவனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

 

நமது இலக்கை அடைவது எவ்வளவு கடினமாக என்றாலும், நம்மை பற்றி மக்கள் என்ன பேசினாலும், நாம் நம் இலக்கை நோக்கி பயணிப்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதை இந்த சிறுவனின் செயல்பாடு காட்டுவதாக அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேஸ்புக் பதில் அவர் கூறியிருப்பதாவது.. ஒரு சில குழந்தைகள் எப்படி தங்கள் இலக்கை அடைய பயணிக்கின்றனர் என்பது எனக்கு இப்போது புரிகிறது. இது தொடர்பாக பல செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால் இந்த மோசமான நடத்தைக்கு தண்டனை கிடைக்க வேண்டும், இந்த குழந்தை தண்டிக்கப்பட வேண்டும் என்பது போன்ற கருத்துக்கள் வருகின்றன. ஆனால் இந்த சிறுவன் மகிழ்ச்சியான மற்றும் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ போகிறான் என்பது என் எண்ணம்.

 

அதற்கான காரணங்களை பின்வருமாறு : 1. தனக்கு என்ன வேண்டும் என்பது அந்த சிறுவனுக்கு சரியாக தெரிகிறது. 2. தனது இலக்கை அடைவதற்கு அந்த சிறுவன் எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக உள்ளான். 3. ‘இது சாத்தியம் இல்லை’ எனக்கூறுபவர்களை அந்த சிறுவன் அனுமதிப்பதில்லை.

 

4. நேர்மை. போலீசாரிடம் அந்த சிறுவன் உண்மையை கூறியுள்ளான். வெற்றிக்கான பழக்க வழக்கங்களை ஊக்குவிக்கவும், அதற்கு வெகுமதி அளிக்கவும் நான் விரும்புகிறேன். எனவே முதல் முயற்சி தோல்வியடைந்திருந்தாலும், தனது இலக்கை துரத்தும் குழந்தைக்கு உதவி செய்ய ஆசைப்படுகிறேன். இவ்வாறு ஜெர்மி நெவ்ஸ் கூறியுள்ளார்.

 

தற்போது அந்த சிறுவன் சந்தோஷமாக இருப்பான் என நம்பலாம். ஆனால் அந்த சிறுவனின் பெற்றோர் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வாய்ப்புகள் இருப்பதாக, இச்சம்பவம் நிகழ்ந்தபோது தகவல்கள் வெளியாயின. ஆனால் அவர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டதா? என்பது உறுதியாக தெரியவில்லை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker