அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச லங்கா சதொச நிலையத்தினருக்கு வாடிக்கையாளர்கள் மற்றும் பிரதேச மக்களின் கோரிக்கை….

M.கிரிஷாந்
அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச லங்கா சதொச நிலையத்தில் ஒரு சில நாட்களின் பின்னர் நேற்றய தினம் (02/06) வாடிக்கையாளர் நபர் ஒருவருக்கு சீனி ஒரு கிலோகிராம் எனும் அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டது.
குறித்த ஒரு கிலோகிராம் சீனியினை பெற்றுக்கொள்வதற்கு சதொச நிலையத்தில் இருந்து மேலும் ஓர் எதாவது பொருள் கொள்வனவு செய்யப்பட வேண்டும் என்ற நிபந்தனையும் காணப்பட்டது.
லங்கா சதொச நிலையத்தில் ஒரு கிலோகிராம் சீனியின் விலை 177 ரூபாவாக காணப்படுவதுடன். ஏனைய வர்த்தக நிலையங்களில் ஒரு கிலோகிராம் சீனியின் விலை 320 ரூபா தொடக்கம் 350 ரூபா வரையாக காணப்படுகின்றது.
அரசாங்கத்தினால் லங்கா சதொச நிலையங்களினால் மக்களுக்கு ஒரு சில அத்தியாவசிய பொருட்கள் குறைந்த விலைகளில் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் சீனியும் மக்களுக்கு குறைந்த விலைகளில் வழங்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச லங்கா சதொச நிலையத்தில் நேற்றய தினம் வாடிக்கையாளர் நபர் ஒருவருக்கு ஒரு கிலோகிராம் சீனி எனும் அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் சீனி வழங்கல் செயற்பாடு இடையில் நிறுத்தப்பட்டதாகவும் அதனால் வாடிக்கையாளர்கள் மற்றும் மக்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்ததாகவும் அறியக்கிடைத்தது.
அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச லங்கா சதொச நிலையத்தில் காணப்படும் முக்கிய விற்பனை பொருட்களின் இருப்பு மற்றும் அவை விற்பனை செய்யும் நாட்கள் நேரங்கள் தொடர்பான தகவல்களை வெளிப்படைத்தன்மையுடன் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அறியப்படுத்தல், காட்சிப்படுத்தல் போன்ற ஒழுங்குகளை இந்த பொருளாதார நெருக்கடியான கலப்பகுயில் மேற்கொள்ள வேண்டும் என மக்கள் மத்தியில் பரவலான எதிர்பார்ப்பு காணப்படுவதுடன் இது தொடர்பான தங்கள் ஆதங்கங்களை வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்திருந்தார்கள்.
இவ் விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து குறித்த நிலையத்தின் நிர்வாகத்தினர் முறையான ஒரு ஒழுங்கினை செயற்படுத்துவது காலத்தின் தேவையாக காணப்படுவதுடன் இவற்றின் மூலமாக எதிர்வரும் காலங்களில் ஏற்படும் முரண்பாடுகளை தவிர்க்கக்கூடியதாக அமையும்.