இலங்கை

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் முக்கிய அறிவிப்பு !

சமூக ஊடகங்கள் மற்றும் யூடியூப் தளங்களின் ஊடாக வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகப் பண மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

பணியகத்தின் எந்தவித அனுமதியுமின்றி சமூக ஊடகங்கள் ஊடாகக் கலந்துரையாடல்களை நடத்தி இந்தப் பண மோசடிகள் நடைபெறுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த விளம்பரங்களில் பெரும்பாலானவை போலி விளம்பரங்கள் என்றும், அவற்றுக்கு பணியகத்தின் அனுமதி பெறப்படவில்லை என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதால், இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பணியகம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில், சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்து, சிங்கப்பூரில் உள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தி உதவியாளர் வேலைகள் வழங்குவதாகக் கூறி, 76 இலட்சம் ரூபாய் வரையான பணத்தை மோசடி செய்த ஒருவரை, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

விசாரணையில் சந்தேகநபர் 3 வருடங்கள் சிங்கப்பூரில் கல்வி கற்றவர் என தெரியவந்துள்ளது.

அங்கு அவர் அறிமுகமான ஒரு நிறுவனத்திற்குத் தொழிலாளர்களை அனுப்புவதாகக் கூறி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் 5 பேரிடம் பணம் பெற்றுள்ளார்.

ஆனால், உறுதியளித்தபடி வேலைவாய்ப்பை வழங்கவில்லை என்பது பணியகத்தின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker