இலங்கை

தமிழர்களுடைய உணர்வுகளை நினைவு சின்னங்களை இடித்து அழிப்பதன் ஊடாக அழிக்க முடியாது – சாணக்கியன் காட்டம்!

தமிழர்களுடைய உணர்வுகளை நினைவு சின்னங்களை இடித்து அழிப்பதன் ஊடாக அழிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டிருந்த பொதுத்தூபி இனந்தெரியாத நபர்களினால் நேற்று இரவு சேதமாக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இதுகுறித்து இன்று(வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே இரா.சாணக்கியன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “நேற்றைய தினம் இலங்கை இராணுவத்தினால் என்று நாங்கள் சந்தேகப்படுகின்றோம். முள்ளிவாய்காலிலே கொல்லப்பட்ட உறவுகளின் நினைவுச் சின்னங்களை அழித்திருப்பதாக, அது அங்கிருந்து அகற்றப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அரசாங்கமானது தொடர்ந்து தமிழர்களுடைய வரலாறுகளை, தமிழர்களுக்கு நினைவு கூறும் வாய்ப்பினை கூட இல்லாமலாக்கும் ஒரு அரசாங்கம்.

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் புதிய அரசாங்கம் ஒன்று வந்ததன் பின்னர் சாதாரணமாக ஒரு உயிரிழந்த உறவுகளை கூட, அதாவது சில சில கொலைகளாக கூட இருக்கலாம், படுகொலைகளாக இருக்கலாம், மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற சில படுகொலைகள் விசேடமாக என்னுடைய பெரியப்பாவும் படுகொலை செய்யப்பட்டார் அவரினுடைய நினைவேந்தலைக் கூட அனுஷ்டிக்க என்னை தடை செய்து, நீதிமன்ற உத்தரவின் ஊடாக எனக்கு தடை விதிக்கப்பட்டது.

அந்த வகையில் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலே கூட இவ்வாறாக ஒரு சம்பவம் நடைபெற்றது. ஆனால் அதை அந்த பல்கலைக்கழக உபவேந்தரே மீண்டும் கட்டி முடித்திருக்கின்றார்.

உண்மையிலேயே தமிழர்களுடைய உணர்வுகளை நீங்கள் இவ்வாறான நினைவு சின்னங்களை இடித்து அழிக்க முடியாது. நீங்கள் இடிக்கும் ஒவ்வொரு நினைவுச் சின்னமும் தமிழர்களுடைய மனங்களில் ஒரு புதிய உணர்வை ஏற்படுத்தும் ஒரு சம்பவமாகத்தான் நான் பார்க்கின்றேன்.

நீங்கள் எவ்வாறு தான் எங்களுடைய உணர்வுகளை தடுக்க முயற்சித்தாலும் நாங்கள் நடந்த எந்த விடயத்தினையும் மறக்க மாட்டோம். இந்த நாட்டில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற எந்த அநீதியையும் நாங்கள் மறக்க மாட்டோம்.

விசேடமாக இந்த வாரம் 2009 ஆம் ஆண்டு எத்தனையோ ஆயிரக்கணக்கான உறவுகளை நாங்கள் இழந்திருந்தோம். அந்த உறவுகள் உயிரிழந்த திகதியோ, உயிரிழந்த இடமோ எங்களுக்கு தெரியாத நிலையிலே கூட அனைவரையும் நினைவு கூர்கின்ற ஒரு இடமாக அந்த நினைவுச் சின்னத்தினை நாங்கள் கடந்த வருடங்களில் பயன்படுத்தியிருந்தோம்.

நீங்கள் தமிழர்களுடைய உணர்வுகளை அழிப்பதற்கு வேறு புதிய வழிகளை தேட வேண்டும். ஏன் என்றால் எங்களுடைய உணர்வுகளை உங்களால் அழிக்க முடியாது.

மிக வன்மையாக நான் இதை கண்டிக்கின்றேன். அதைப்போலத்தான் அரசாங்கத்துடன் இணைந்திருக்கின்ற எங்களுடைய தமிழ் பிரதிநிதிகளும் கூட இதுதொடர்பாக உங்களுடைய கண்டனத்தினை நீங்கள் தெரிவிக்க வேண்டும். இன்று நீங்கள் அரசாங்கத்துடன் இருந்தாலும் உங்களை தெரிவு செய்தது தமிழ் மக்கள் தான். உங்களை தெரிவு செய்த மக்களினுடைய உறவுகளும் கூட அந்த வாரத்திலே, அந்த மாதங்களிலே அந்த இறுதி யுத்தத்திலேயே நிச்சயமாக உயிரிழந்திருப்பார்கள்.

உங்களும் பொறுப்பொன்று உள்ளது. இவர்களை நினைவு கூர்வதற்கு நினைவு தூபிகளை இடிக்காமல் பாதுகாக்கின்ற முழுப்பொன்று உள்ளது. இந்த அரசாங்கம் தன்னுடைய இறுதி ஊர்வலத்திலே பயணிக்க ஆரம்பித்து விட்டது என்பதை நான் இந்த இடத்திலே சொல்ல விரும்புகின்றேன். நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று ஒரு வருடத்திற்குள்ளேயே தன்னுடைய இறுதி ஊர்வலத்திலே பயணிக்க ஆரம்பித்து விட்டது.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker