ஈஸ்டர் தாக்குதலுக்கான முழு பொறுப்பையும் மைத்திரிபால சிறிசேனவே ஏற்க வேண்டும்- பூஜித்

ஈஸ்டர் தாக்குதலுக்கான முழு பொறுப்பையும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஏற்க வேண்டுமென முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழுவில், நேற்று (வியாழக்கிழமை) முன்னிலையாகி இருந்த பூஜித் ஜெயசுந்தர இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த வருடம் ஏப்ரல் 9ஆம் திகதி மாநில புலனாய்வு சேவை இயக்குநர் நிலந்த ஜெயவர்தனவுக்கு உளவுத்துறை எச்சரிக்கை குறித்து அறிக்கை கிடைத்தவுடன், அவர் அதனை மேற்கு மாகாணத்தின் எஸ்.டி.ஐ.ஜி.லத்தீப், டி.ஐ.ஜி சிறப்பு பாதுகாப்பு பிரிவை சேர்ந்த ரங்க பிரியலால் தஸ்நாயக்க மற்றும் பயங்கரவாத புலனாய்வு பிரிவு இயக்குநர் வருண ஜெயசுந்தர ஆகியோருக்கும் தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அந்தந்த மாகாணங்களுக்கு பொறுப்பான அனைத்து அதிகாரிகளையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இவ்விடயம் தொடர்பாக அவர் அறிவித்துள்ளார்.
அனைத்து மூத்த பொலிஸ் அதிகாரிகளுக்கும், பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக அவர் அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தாலும், விசாரணையின் போது, அவரது தொலைபேசி அழைப்பு பதிவுகள் அனைத்தும் நீக்கப்பட்டிருப்பதைக் கண்டறிய கூடியதாக இருந்தது.
முன்னாள் ஜனாதிபதி சிறிசேனவின் சகோதரர், இந்த காலகட்டத்தில் இலங்கை தொலைத் தொடர்பு மற்றும் மொபிடலின் தலைவராக இருந்தார்.
இந்த அழைப்பு பதிவுகளுக்கு என்ன நடந்தது என்பதை ஆணையகம் முழுமையாக விசாரிக்க வேண்டும்.
மேலும், தற்கொலை குண்டுதாரியான அப்துல் லத்தீப் ஜமீல் முகமது, தன்னை வெடிக்க வைப்பதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பு உளவுத்துறை அதிகாரிகளை சந்தித்ததாகவும் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.