இலங்கை

சிறுவர்களுக்கு கட்டம் கட்டமாக கொவிட் தடுப்பூசிகளை வழங்க திட்டம்

பன்னிரெண்டு வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கட்டம் கட்டமாக கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (15) தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் நிறுவப்பட்டுள்ள தென் மாகாண கொவிட்-19 சிறுவர் சிகிச்சை பிரிவை திறந்து வைக்கும் நிகழ்வில் தங்காலை கால்ட்ன் இல்லத்திலிருந்து காணொளி தொழில்நுட்பம் ஊடாக இணைந்து கொண்ட போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் போது பல்வேறு பிரச்சினைகள் காணப்படும் சிறுவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

பிரதமரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ சம்பிரதாய முறைப்படி விளக்கேற்றி ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் நிறுவப்பட்டுள்ள தென் மாகாண கொவிட்-19 சிறுவர் சிகிச்சை பிரிவை திறந்துவைத்தார். அதனை தொடர்ந்து வைத்தியர்கள் உள்ளிட்ட தாதியர்களுடன் கண்காணிப்பிலும் ஈடுபட்டார்.

ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் கொவிட் சிகிச்சை நடவடிக்கைகள் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. அன்று முதல் இதுவரை சுமார் 6000 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

கொவிட் தொற்றுக்கு உள்ளாகும் சிறுவர்களுக்கு இதுவரை மகளிர் வார்டு வளாகத்திலேயே சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.

புதிய பிரிவு நிறுவப்பட்டதன் ஊடாக சிறுவர்கள் தொடர்பாக விசேட கவனம் செலுத்த முடியும் என வைத்தியர்கள் தெரிவித்தனர்.

கொவிட்-19 சிறுவர் சிகிச்சை பிரிவுகளை அனைத்து மாகாணங்களிலும் நிறுவுவதே சிறுவர் வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் எண்ணக்கருவாகவுள்ளது.

குறித்த நிகழ்வில் காணொளி தொழில்நுட்பம் ஊடாக இணைந்து கொண்டு பிரதமர் ஆற்றிய உரை வருமாறு,

நமது நாட்டின் பிள்ளைகளை பாதுகாப்பது நம் அனைவரதும் பொறுப்பாகும். அவர்களே நமது நாட்டின் எதிர்காலம். இன்று பெற்றோர் போன்றே ஒரு அரசாங்கமாக நாமும் குழந்தைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

வரலாற்றை நோக்கும் போது உலகம் பல்வேறு தொற்றுகளுக்கு முகங்கொடுத்துள்ளது. தொழில்நுட்ப ரீதியில் எவ்வளவு முன்னேற்றம் காண்பினும் தொற்றுகளுக்கு முறையான தீர்வை காண்பது மிகவும் கஷ்டமானது என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

அதனால் நாம் இதுபோன்ற காலப்பகுதியில் வேறு சந்தர்ப்பங்களைவிட பலமாகவும், ஒற்றுiமையாகவும் இவ்வாறான தொற்றுகளை எதிர்கொள்ள வேண்டும்.

வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட வைத்தியசாலை ஊழியர்கள், முப்படையினர், பொலிஸ் உள்ளிட்ட அரச மற்றும் தனியார் துறையை சார்ந்த பலர் இதுவரை கொவிட் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க இரவு பகல் பாராது உழைக்கின்றனர்.

அதற்காக அவர்களது அர்ப்பணிப்பை ஒரு அரசாங்கமாக நாம் எப்போதும் பாராட்டினோம். அதுமாத்திரமன்றி நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் அவர்களது இந்த அர்ப்பணிப்பை முழு மனதுடன் பாராட்டுகின்றனர்.

குழந்தைகள் மீது அன்பு செலுத்தும், அவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் ஒரு கலாசாரமே எமது நாட்டில் காணப்படுகின்றது. அதனால் குழந்தைகளை பாதுகாப்பது தொடர்பில் நாம் எப்போதும் சிந்திக்கின்றோம்.

கொவிட் தொற்று பரவி தமது பிள்ளைகளுக்கும் இந்த தொற்றுக்கு முகங்கொடுக்க நேரிடுமோ என்ற அச்சம் பெற்றோர் மத்தியில் காணப்படுகிறது.

நான் ஒரு தந்தை என்ற ரீதியிலும், எனது பாரியார் ஷிரந்தி ஒரு தாய் என்ற ரீதியிலும் குழந்தைகள் தொடர்பில் சிந்திக்கும் விதம், அதற்கு மேலாக பேரக்குழந்தைகள் பற்றி சிந்திக்கும் விதம், அவர்கள் மீது காட்டும் அன்பு என்பன எமக்கு புதிதல்ல. நாம் எந்நாளும் எமது நாட்டு பிள்ளைகள் குறித்து அவ்வாறே சிந்தித்தோம்.

அதனால் ஏனைய மக்கள் போன்றே விசேடமாக இக்குழந்தைகளை தொற்றிலிருந்து பாதுகாக்க நாம் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம் என்பதை நினைவுபடுத்த வேண்டும்.

எமது நாட்டின் சிறுவர் விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் நாடு குறித்து சிந்தித்து தேவையான நடவடிக்கைகளை நிறைவேற்றிய ஒரு வைத்திய சங்கமாகும்.

இதனாலேயே, குழந்தைகளை கொவிட் நோயிலிருந்து பாதுகாப்பதற்கு, அவர்களின் உயிரை பாதுகாப்பதற்கு அரசாங்கத்திற்கு உள்ள ஆர்வத்தை கண்டு, குழந்தைகளுக்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் கொவிட் சிகிச்சை பிரிவை அவர்களால் ஆரம்பிக்க முடிந்தது.

விரைவில் ஏனைய மாகாணங்களுக்கும் இதுபோன்ற சிகிச்சை பிரிவுகளை பெற்றுக் கொடுப்பதாக இச்செயற்பாட்டை நிறைவேற்றிய விசேட வைத்திய நிபுணர்கள் என்னிடம் குறிப்பிட்டனர். அதற்கமைய இச்செயற்பாடு நிறைவடையும்போது அனைத்து மாகாணங்களிலும் சிறுவர் கொவிட் சிகிச்சை பிரிவொன்று நிறுவப்படும்.

அதுமாத்திரமன்றி, சிறுவர்களின் கல்விக்காக அர்ப்பணிப்பு செய்யவும் இந்த வைத்தியர்கள் தயாராக உள்ளனர்.

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது நாட்டின் 99 கல்வி வலயங்களுக்கும் ஒரு விசேட வைத்திய நிபுணர் என்ற அடிப்படையில் நியமித்து, பிள்ளைகளை கண்காணிப்பதற்கும் அவர்கள் முன்வந்தனர்.

முழு உலகத்திலும் காணப்படும் நிலைமையை அறிந்தும் சிலர் இந்நேரத்திலும் தமது கோரிக்கைகளுக்கே முன்னுரிமை வழங்குகின்றனர். தீர்வை பெற்றுத்தர கால அவகாசம் வழங்குமாறு கோரினாலும் அவர்கள் அவற்றிற்கு செவிமடுக்காது பிள்ளைகளுக்கு கல்வி கற்பிக்காது அரசாங்கத்திற்கு கற்பிக்க செல்கின்றனர்.

இந்த தொற்று ஏற்பட்ட போது பிள்ளைகளின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு முதலில் பாடசாலைகளை மூடினோம்.

அவ்வப்போது ஆபத்து குறைந்த போதிலும் நாம் பாடசாலைகளை திறக்கவில்லை என்பது உங்களுக்கு நினைவிருக்கும்.

எனினும், இவ்வாறு பாடசாலைகளை மூடி வைத்திருக்கு எமக்கு விருப்பம் இல்லை.

ஏனெனில் கல்வி மாத்திரமன்றி கல்விக்கு அப்பாற்பட்ட அறிவும் பாடசாலைகளில் புகட்டப்படுகின்றது. பாடசாலைகளில் ஆசிரியர்கள் எமக்கு வாழ்க்கையையும் கற்பிக்கின்றனர். அது இன்றைய நாளைவிட எதிர்காலத்திற்கே உதவும்.

அதனால் அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்ட பின்னர் 12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கட்டம் கட்டமாக தடுப்பூசி வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதன்போது பல்வேறு பிரச்சினைகள் உள்ள பிள்;ளைகளுக்கு முன்னுரிமை வழங்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.

எமக்கு மட்டுமின்றி உலகின் பல அபிவிருத்தி அடைந்த நாடுகளுக்கும் இந்த தொற்றை கட்டுப்படுத்துவது ஒரு சவாலாக காணப்படுகிறது. தடுப்பூசி வழங்கலின் மூலம் உயிர் ஆபத்துகளை தடுத்து நோய் பரவலை கட்டுப்படுத்துவதே தற்போதுள்ள ஒரே தீர்வாகும்.

நாம் ஒரு நாடு என்ற ரீதியில் தடுப்பூசி ஏற்றும் செயற்பாட்டில் மிகவும் முன்னணியில் காணப்படுகின்றோம். எனினும், இதனை மேலும் துரிதப்படுத்தி மக்களின் உயிரை காக்க வேண்டும். அதற்காகவே நாம் முன்னுரிமை வழங்குகின்றோம்.

எனினும், இதனிடையே சிலர் அரசியல் செய்துக் கொண்டிருக்கின்றனர். அது புதிய விடயமல்ல. இவை எமக்கு நன்கு பழக்கமாகிவிட்டது. இதனால் இவற்றிற்கு பதிலளிப்பதை விட அந்த காலத்தை, உயிரை பாதுகாப்பதற்கு ஈடுபடுத்தலாம் என நாம் நம்புகின்றோம்.

நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் குறித்து சிந்தித்து முன்னெடுக்கும் சில தீர்மானங்கள் மக்களுக்கு சங்கடங்களை தோற்றுவிப்பினும் அவ்வாறான தீர்மானங்களை எமக்கு முன்னெடுக்க வேண்டியுள்ளது. கடுமையான போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதித்தல் போன்ற தீர்மானங்கள் உங்களதும் எமதும் அனைவரதும் பாதுகாப்பிற்காகவே ஆகும்.

நீங்கள் இச்சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தின் பொறுப்பை கண்காணிப்பது போன்றே சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி தமக்கான பொறுப்பையும் நிறைவேற்றுவீர்களாயின் நமக்கு இந்த சவாலை வெற்றி கொள்வது கடினமானதல்ல.

இவ்வாறான சூழலில் குழந்தைகளை பாதுகாப்பதற்காக அரசாங்கத்திற்கு ஆதரவாக சிறுவர் விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் அனைத்து வைத்தியர்கள், ஏனைய வைத்தியர்கள் உள்ளிட்ட வைத்தியசாலை ஊழியர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker