அமெரிக்கா தனது கொடூரக் குற்றத்திற்காக பழிவாங்கப்படும் – ஈரான் பதில் அறிவிப்பு

ஈரானின் இதயம் காயப்பட்டிருக்கிறது எனவும் அமெரிக்கா தனது கொடூரக் குற்றத்திற்காக பழிவாங்கப்படும் என்றும் ஈரானின் ஜனாதிபதி ஹசன் ருஹானி தெரிவித்துள்ளார்.
ஈரான் ஆதரவு பெற்ற குவாட்ஸ் படையின் தளபதி சுலைமான் அமெரிக்கப் படையால் கொல்லப்பட்டதற்காக அந்நாட்டு ஜனாதிபதி அமெரிக்காவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
சுலைமான் கொல்லப்பட்டமை குறித்து ஹசன் ருஹானி இன்று (வெள்ளிக்கிழமை) கூறுகையில், “அமெரிக்காவின் இந்த கொடூரக் குற்றத்திற்கு ஈரான் போன்ற சிறந்த நாடும் அதன் பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளும் பழிவாங்கும் என்பதில் சந்தேகமில்லை. அமெரிக்கா தனது குற்ற நடவடிக்கையால் ஈரானின் இதயத்தை காயப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கொடுமைகளுக்கு எதிராக நிற்கவும், இஸ்லாமிய மதிப்புகளை பாதுகாக்கவும் ஈரான் தனது உறுதியை இரட்டிப்பாக்கியுள்ளது.
அமெரிக்காவின் இந்த கோழைத்தனமான செயல் அதன் விரக்தி மற்றும் பலவீனத்தின் மற்றொரு அறிகுறியாகும். அமெரிக்கா அதன் செயலுக்கு நிச்சயம் பழிவாங்கப்படும்” எனத் தெரிவித்தார்.
ஈராக்கிலுள்ள அமெரிக்க இராணுவ நிலை மீது கடந்த வாரம் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில், அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் பாதுகாப்புப் படை வீரர் உயிரிழந்தார். அந்தத் தாக்குதலை, ஈரான் ஆதரவு பெற்ற கடாயெப் ஹிஸ்புல்லா படையினர் நடத்தினர். இதற்குப் பதிலடியாகவே அந்தப் படையினர் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 25 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து காபூலிலுள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பு ஏராளமான ஹிஸ்புல்லா ஆதரவுப் போராட்டக்காரர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அலுவலகத்தை சேதப்படுத்தினர்.
இதற்குப் பதிலடியாக இன்று அதிகாலை பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க இராணுவம் ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான், ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை இராணுவப் படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸும் ஆகியோர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அமெரிக்கா – ஈரான் இடையே மோதல் வலுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.