துனிசியாவில் ஐந்து ஆண்டுகளாகத் தொடரும் அவசரகால நிலை மீண்டும் நீடிப்பு!

துனிசியாவில் நாடு தழுவிய அவசரகால நிலை இன்று 26ஆம் திகதி முதல் 2021 ஜூன் 23 வரை ஜனாதிபதியால் நீடிக்கப்பட்டுள்ளது.
ஐ.எஸ்.ஐ.எல் தீவிரவாதக் குழுவால் ஜனாதிபதி பாதுகாப்புப் படையின் பேருந்து மீது கடந்த 2015ஆம் ஆண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தத் தாக்குதலில் ஜனாதிபதியின் 12 காவல் படை வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து 2015 நவம்பர் 24ஆம் திகதி அமுல்படுத்தப்பட்ட அவசரகால நிலை தொடர்ந்து நீடிக்கப்பட்டு வருகிறது.
இந்த அவசரகால நிலையானது, நாட்டின் பாதுகாப்புப் படையினருக்கு பல விதிவிலக்கான அதிகாரங்களை வழங்குவதுடன் இது ஊடகங்களைக் கட்டுப்படுத்தவும் வேலைநிறுத்தங்கள் மற்றும் கூட்டங்களையும் தடைசெய்யவும் வழி வகுக்கிறது.
இந்நிலையில், இந்த அவசரகால நிலை அமுல்படுத்தலுக்கு உரிமைகள் குழுக்கள் தொடர்ந்து கண்டனங்களைத் தெரிவித்து வருவதுடன், இது பரவலான மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுப்பதாக தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.