பாதுகாப்பு அங்கிகளை வழங்கி வைத்த ஒன்றியத்திற்கு நன்றி- வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஜ.எம். ஜவாஹிர்

வி.சுகிர்தகுமார்
அம்பாரை மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் இணைப்பாளர் இரா.விக்னேஸ்வரன் மற்றும் சமூக ஆர்வலர் விமல் ரெயிலரின் முயற்சியின் பயனாக உள்ளுரில் தயாரிக்கப்பட்ட சுகாதார துறையினருக்கான 50 தனிநபர் பாதுகாப்பு அங்கிகள் வைத்திய அத்தியட்சகர் ஜ.எம். ஜவாஹிரிடம் இன்று கையளிக்கப்பட்டன.
இவ்வாறு கையளிக்கப்பட்ட தனிநபர் பாதுகாப்பு அங்கிகளை பொறுப்பேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் கொரோனா நோயாளிகள் மற்றும் கொரேனா நோய் தாக்கம் உள்ளவர்கள் என சந்தேகிக்கப்படுகின்றவர்களை பரிசோதனை செய்தல் மற்றும் சிகிச்சையளித்தலின் பொருட்டு தேவைப்படும் பாதுகாப்பு உடைகள் வைத்தியசாலையில் போதியளவு இல்லை.
சுகாதார அமைச்சினாலும் மட்டுப்படுத்தப்பட்ட அளவே பாதுகாப்பு உடைகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் பல்வேறுபட்ட தனிநபர்களும் அமைப்புக்களும் தொடர்ச்சியாக இதுபோன்ற பாதுகாப்பு உடைகளை அன்பளிப்பாக வழங்கி வருகின்றனர்.
இதனடிப்படையில் அம்பாரை மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியம் 50 பாதுகாப்பு உடைகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளனர். இதற்காக வைத்தியசாலையின் சார்பிலும் இப்பிரதேச மக்களின் சார்பிலும் குறித்த அமைப்பினருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
இதேநேரம் கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் உயர்ந்த பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் சுகாதார துறையினருக்கு உதவும் வகையில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைவாக உள்ளுரில் தயாரிக்கப்பட்டுவருகின்ற அங்கிகளுக்கான பொருத்தமான துணியை மாவட்ட சிவில் சமூக பாதுகாப்பு செயற்பாட்டாளர்கள் ஒன்றியம் பெற்றுக்கொடுத்துள்ளதுடன் அங்கியை முற்றும் முழுதாக இலவசமாக தைத்து கொடுக்கும் அரும்பணியை அக்கரைப்பற்றை சேர்ந்த விமல் ரெயிலர் நிலையத்தின் உரிமையாளர் தலைமையிலான குழுவினர் ஏற்று செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.