இலங்கை
Trending

இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வௌியிட்ட விடயம் !

மத்திய கிழக்கு உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் நிலவும் பிரச்சினைகளால் எதிர்வரும் ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைத் தமிழர் பிரச்சினை நீர்த்துப் போகாமல் இருப்பதற்காகவே தான் நேரடியாக இங்கு வந்ததாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் தன்னிடம் தெரிவித்ததாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் நேற்று இரவு அரசியல் பிரமுகர்களுடன் சந்திப்பில் ஈடுபட்டார்.

யாழ்ப்பாண நகரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், இராசமாணிக்கம் சாணக்கியன், செல்வம் அடைக்கலநாதன், சிறீ பவனாந்தராஜா ஆகியோரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனும் பங்கேற்றனர்.

சந்திப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த இராசமாணிக்கம் சாணக்கியன் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், மத்திய கிழக்கு உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் நிலவும் பிரச்சனைகள் காரணமாக எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கைத் தமிழர் பிரச்சனை நீர்த்துப் போகாமல் இருப்பதற்காகவே தான் நேரடியாக இங்கு வந்ததாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் என்னிடம் தெரிவித்தார்.

ஈரான் – இஸ்ரேல், பாகிஸ்தான் – இந்தியா, ரஷ்யா – உக்ரைன், இஸ்ரேல் – பலஸ்தீனம் என சர்வதேச ரீதியில் நாடுகளிடையே பிரச்சினைகள் நிலவும் போது இலங்கை விவகாரம் எதிர்வரும் ஜெனிவா கூட்டத்தில் காத்திரமாக பேசப்படுமா என நான் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரிடம் கேட்ட போது, இலங்கை விவகாரம் நீர்த்துப் போகாமல் இருப்பதற்காகவே தான் நேரடியாக இங்கு வந்ததாக தெரிவித்தார் –

மேலும் மனித புதைகுழிகள் விவகாரம், அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக குறித்த சந்திப்பில் பேசப்பட்டது – என்றார்.

மிக மோசமாக அரசாங்கம் நடக்காமல் இருப்பதற்கு ஜெனீவா தீர்மானங்களை தொடர்ந்து முன் கொண்டு செல்ல வேண்டும் என்பதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகருக்கு வலியுறுத்தியதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பங்காளி கட்சித் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

சித்தார்த்தன் மேலும் தெரிவிக்கையில், காணிப் பிரச்சினை காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை சிறைகளில் வாடுகின்றவர்களின் பிரச்சினைகளை நாம் சொல்லும் போது அவர் தமக்கு தெரியும் என்று சொன்னார். முக்கியமாக பல பிரச்சினைகள் எடுக்கப்படுகின்றபடியால் எவ்வளவு தூரம் இலங்கை விவகாரத்தில் அக்கறை எடுக்கப்படும் என்பது தனக்கு தெரியாது. இருந்தாலும் தன்னுடைய முயற்சியை தான் முழுமையாக எடுப்பதாக உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து செம்மணி புதைகுழி உள்ளிட்ட நிலைமைகளை நேரடியாக பார்வையிட்டதுக்கு நாம் நன்றி சொன்னோம் – என்றார்.

செம்மணி, குருந்தூர் மலை வெடுக்குநாறி மலை, வலிகாமம் வடக்கு காணி விடுவிப்பு உள்ளிட்ட பல விடயங்களை சுட்டிக்காட்டியதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், இலங்கையிலே பொறுப்பு கூறல் என்பது நேர்மையான கண்ணியமான முறையில் முன்வைக்கப்படவில்லை. பொறுப்புக் கூறலை பரிகார நீதியுடன் கூடியதாக வலியுறுத்த வேண்டியதன் அவசியத்தை நாம் தெளிவுடன் எடுத்து கூறியுள்ளோம் – என்றார்.

முப்பது வருடப் போரிலும் அதற்கு பிற்பட்ட 16 வருடங்களிலும் எதுவித முன்னேற்றத்தையும் காணாத தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக தான் எடுத்துக் கூறியதாகவும் எமது அரசாங்கம் இந்த பிரச்சினையை கையாண்டு மக்களுக்கு தீர்வை தருவதில் மிக முனைப்பாக இருப்பதாக தான் சுட்டிக்காட்டியதாக பாராளுமன்ற உறுப்பினர் சிறீ பவனாந்தராஜா தெரிவித்தார்

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker