ஜனாதிபதி கோட்டாவுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார்- சம்பந்தன் சபையில் அறிவிப்பு

அதிகார பரவலாக்கல் மூலமாக தமிழ் மக்களின் மனங்களை வெற்றிகொள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்தால் தாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாரென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசியல்வாதியாக இல்லாத காரணத்தினால் அவர் உண்மைகளைப் பேசுகின்றார் எனவும் அவர் சரியானதைச் செய்வார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை மீதான இரண்டாவது நாள் விவாதம் இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நிலையில் அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள ஜனாதிபதியால் முடியாமல் போயுள்ளதென்றால் அதற்கு தமிழ் மக்களின் மனங்களை வெற்றிகொள்ள முடியாமல் போனமையே காரணமாகும்.
அரசியல் அமைப்பு உருவாக்கத்தின் மூலமாக தீர்வு காணப்பட வேண்டும் என்ற முயற்சிகள் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது. ஆனால் தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட முடியவில்லை. எனவே இந்த புதிய அரசாங்கம் உறுதியான தீர்வு ஒன்றினைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
இந்த நாட்டில் பல்லின சமூகங்கள் வாழ்கின்றனர். எனினும் இந்நாட்டில் பெளத்த சிங்கள மக்கள் பெரும்பான்மை மக்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. எனினும் ஏனைய சமூகங்களும் வாழ்கின்றனர். அவர்களைப் புறக்கணிக்க முடியாது.
ஏனைய மக்களின் கலாசாரம், சமூக கட்டமைப்பை மதிக்க வேண்டும். நீண்டகாலமாக இந்தக் கட்டமைப்பு உள்ளது. எமக்கு எவருடனும் முரண்பட வேண்டும் என்ற நோக்கம் இல்லை. அனைத்து மக்களுடனும் ஒன்றுபட்ட நாட்டுக்குள் நல்லிணக்கமாக வாழ வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே உள்ளது” என இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.