இலங்கை

இலங்கை உட்பட சில நாடுகளின் பொலிஸ் படைகளுக்கான சர்வதேச பயிற்சிகளை நிறுத்தக் கோரிக்கை!

இலங்கை உட்பட அடக்குமுறையில் ஈடுபடும் படைகளுக்கான பொலிஸ் பயிற்சித் திட்டங்களை நிறுத்துமாறு இங்கிலாந்து அரசுக்கு ஆயுத வர்த்தகத்திற்கு எதிரான பிரசாரம் என்ற அமைப்பு (Campaign Against Arms Trade) அழைப்பு விடுத்துள்ளது.

அத்துடன், பொலிஸ் கல்லூரி வழங்கும் அனைத்து சர்வதேசப் பயிற்சிகளையும் மதிப்பாய்வு செய்யுமாறும் கோரப்பட்டுள்ளது.

2012இல் கல்லூரி நிறுவப்பட்டதிலிருந்து, குறைந்தபட்சம் 76 நாடுகளுக்கு பயிற்சி மற்றும் உதவிகளை வழங்கியுள்ளதாக ஆயுத வர்த்தகத்திற்கு எதிரான பிரசாரம் அமைப்பு தெரிவித்துள்ளது.

அத்துடன், வெளிநாட்டு மற்றும் கொமன்வெல்த் அலுவலகத்தால் (Foreign & Commonwealth Office) மனித உரிமைகள் கவனிக்கப்படும் நாடுகளாகப் பட்டியலிடப்பட்ட 12 நாடுகளுக்கும் இவ்வாறு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், சீனா, கொலம்பியா, எகிப்து, லிபியா, பாகிஸ்தான், ருவண்டா, சவுதி அரேபியா, சோமாலியா, இலங்கை மற்றும் சூடான் ஆகிய நாடுகள் இந்தப் பட்டியலில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைவிட, சித்திரவதைக் குற்றச்சாட்டுக்கு உள்ளான பொலிஸ் படைகளைக் கொண்ட பல நாடுகளும் பட்டியலிடப்பட்டுள்ளன. இவை, வெளியுறவு மற்றும் கொமன்வெல்த் அலுவலகத்தின் பட்டியலில் இல்லை. ஆனால், இவற்றில் இங்கிலாந்து ஆயுதங்களை வாங்கும் நாடுகளும் உள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆயுத வர்த்தகத்திற்கு எதிரான பிரசாரத்தின் செய்தித் தொடர்பாளர் அன்ட்ரூ ஸ்மித் (Andrew Smith of Campaign Against Arms Trade) தெரிவிக்கையில்,

“இந்தப் பொலிஸ் படைகளில் பல சித்திரவதை மற்றும் பிற முறைகேடுகள் பற்றி குற்றம் சாட்டப்பட்டுள்ளன. அத்துடன், மிருகத் தனமான மற்றும் அடக்குமுறைச் சட்டங்களை நிலைநிறுத்த அவர்கள் தங்கள் சக்தியைப் பயன்படுத்துகிறார்கள். இங்கிலாந்து அவர்களுடன் ஒத்துழைக்கவோ அல்லது அவர்களின் சர்வாதிகார ஆட்சியை வலுப்படுத்தவோ கூடாது.

அமெரிக்காவில் கறுப்பினத்தவரான ஜோர்ஜ் ஃப்ளொய்ட்டின் கொலை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட அடக்குமுறைகள் மாநில வன்முறைக்கு வழிவகுத்ததுடன் சர்வதேச கவனத்தை ஈர்த்தன. ஆனால், இது அமெரிக்காவில் மட்டுமுள்ள பிரச்சினையல்ல. இது உலகம் முழுவதும் நடக்கிறது. பாசாங்குத்தனத்திற்கு ஒரு முடிவு இருக்க வேண்டும்.

இந்நிலையில், எந்த பொலிஸ் படைகளுக்கு இங்கிலாந்து பயிற்சியளித்தது என்பதையும், மனித உரிமை மீறல்களில் அந்தப் படைகள் ஈடுபட்டுள்ளனவா என்பது குறித்தும் ஒரு முழு மதிப்பாய்வு இருக்க வேண்டும்.

இலங்கையில் மனித உரிமைகள் குறித்து கவலைகளை எழுப்பிய போதிலும், இங்கிலாந்து தனது ஆயுத ஒப்பந்தங்களையும் தீவுடனான இராணுவப் பயிற்சி நடவடிக்கைகளையும் தொடர்ந்து பராமரித்து வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker