இலங்கை
Trending

இனவாதி என்று குறிப்பிடப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் கூட இந்நிலை ஏற்படவில்லை – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் !

வடக்கு காணிகள் குறித்து பிரசுரித்த வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்தும் வழிமுறை காணி கட்டளைச் சட்டத்தில் கிடையாது. 03 மாதத்துக்குள் காணி உரித்தை உறுதிப்படுத்தாவின் தமிழர்களின் தனிப்பட்ட மற்றும் பொது காரணிகள் அரசுடமையாக்கப்படும். இனவாதி என்று குறிப்பிடப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் கூட இந்நிலை ஏற்படவில்லை. இந்த வர்த்தமானியை அரசாங்கம் உடன் வாபஸ் பெற வேண்டும்.இல்லையேல் நல்லிணக்கம் முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எச்சரித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20) நடைபெற்ற அமர்வின் போது வடக்கு மாகாணத்தில் உள்ள காணிகள் தொடர்பில் அண்மையில் n வெளியிடப்பட்ட வர்த்தமானியை மீளப்பெறல் தொடர்பான பிரேரணையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

காணி நிர்ணய கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் 2025.03.28 ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் காணிகளுக்கான உரித்தை 3 மாத காலத்துக்குள் கோர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த வர்த்தமானியின் பிரகாரம் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது இடைநிறுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்படுகிறது.

காணி கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் இந்த வர்த்தமானியை இடைநிறுத்த முடியாது.அதற்கான சட்ட ஏற்பாடுகள் ஏதும் கிடையாது.03 மாத காலத்துக்குள் உரித்துக்களை உறுதிப்படுத்தாவிடின் தமிழ் மக்களின் தனியார் காணிகள் மற்றும் பொது காணிகள் அரசுடமையாக்கப்படும் என்பதை உறுதியாக குறிப்பிட முடியும். ஆகவே இந்த வர்த்தமானியை மீளப்பெற வேண்டும்.

யுத்தக் காலத்தில் தமிழ் மக்கள் தமது உடமைகளை இழந்து நாட்டை விட்டு வெளியேறினார்கள். வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் தேசியத்தில் வாழும் தமிழ் மக்களின் சனத்தொகைக்கு இணையாகவே வெளிநாடுகளில் தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள். காணிகளுக்கான உரித்தை உறுதிப்படுத்த முடியாத நிலை காணப்படுகின்ற நிலையில் தான் இந்த வர்த்தமானி ஊடாக 3 மாத காலவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் காலத்தில் தான் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. வர்த்தமானி குறித்து எவரும் அறியவில்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இனவாதத்தின் உச்சம் என்று குறிப்பிடப்பட்டது அவரது ஆட்சியில் கூட இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறவில்லை. அரசாங்கம் ஏன் இந்த விடயத்தில் மறைமுகமாக செயற்பட வேண்டும். காணி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமாயின் குழுவோ அல்லது ஆணைக்குழுவோ அமைத்து இவ்விடயம் ஆராயப்பட்டிருக்க வேண்டும் நாங்களும் ஒத்துழைப்பு வழங்கியிருப்போம்.

காணி என்பது எமது அடிப்படை பிரச்சினை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் பூர்வீக காணிகளில் சிங்கள குடியேற்றங்கள் திட்டமிட்ட வகையில் அமைக்கப்பட்டன. இதனால் தான் பல பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன. இந்த வர்த்தமானியை அரசாங்கம் உடன் வாபஸ் பெற வேண்டும். இந்த வர்த்தமானிக்கு அமைய செயற்பட்டால் தேசிய நல்லிணக்கம் முடிவுக்கு கொண்டு வரப்படும் என்பதை உறுதியாக குறிப்பிட்டுக் கொள்கிறேன் என்றார்.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker