இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்குவது கட்டாயமானது!- திஸ்ஸ விதாரண

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்குவது கட்டாயமானது. இதனையே சர்வதேசமும் ஆரம்பத்தில் இருந்து வலியுறுத்துகிறது என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
இலங்கையின் உள்ளக விவகாரங்களில் சர்வதேசம் தலையிட முடியாது என குறிப்பிட முடியாது. ஏனெனில் இலங்கை ஜனநாயக கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு சர்வதேசத்துடன் ஒன்றிணைந்துள்ளது
இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரரணை குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை தொடர்பில் இலங்கைக்கு ஆதரவாக 11 நாடுகள் மாத்திரமே வாக்களித்துள்ளன.
கடந்த காலங்களில் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்ட ஆசிய நாடுகள் மத்திய நிலை வகித்துள்ளன. இவற்றில் இந்தியா, ஜப்பான் ஆகிய நட்பு நாடுகளை பிரதானமாக குறிப்பிட வேண்டும்.
சர்வதேச நாடுகளுக்கு அடிபணிய முடியாது என பேச்சளவில் மாத்திரமே குறிப்பிட முடியும். இலங்கையின் ஒரு சில உள்ளக விவகாரங்களில் சர்வதேசம் கவனம் செலுத்தும். இலங்கை ஜனநாயக கோட்பாட்டை முன்வைத்து சர்வதேசத்துடன் ஒன்றிணைந்துள்ளது. ஆகவே ஜனநாயக விவகாரங்கள் குறித்து சர்வதேசம் கேள்வி எழுப்பும்.
காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துவது குறித்து அரசாங்கம் அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும். ஜெனிவாவில் மாகாண சபை தேர்தல் குறித்து அதிகம் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மாகாண சபை தேர்தல் பிற்போடப்பட்டுள்ளமைக்கு கடந்த அரசாங்கத்தில் இரு அரச தலைவர்களும் பொறுப்பு கூறவேண்டும். என்றார்