நாடாளுமன்றைக் கலைக்க 2/3 பெரும்பான்மை அவசியம் என்பதை அரசாங்கம் மறக்க கூடாது- சஜித்

உரிய காலத்திற்கு முன்னர் நாடாளுமன்றைக் கலைக்க வேண்டுமெனின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் என்பதை அரசாங்கம் மறந்து விடக்கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஜாஎல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளதாவது, “பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாத சிலர், மார்ச் மாதம் 2 ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றைக் கலைக்க வேண்டும் என்று நாடளாவிய ரீதியாக கூறிக்கொண்டு வருகிறார்கள்.
ஏப்ரல் புதுவருடத்தில் மக்களுக்கு சலுகைகளை வழங்க முடியாத காரணத்தினால்தானா, இவ்வாறு அவசரப்படுகின்றீர்கள் என நான் அரசாங்கத்திடம் கேட்க விரும்புகிறேன்.
ஆனால், உரிய நேரத்திற்கு முன்னர் நாடாளுமன்றைக் கலைக்க வேண்டுமெனில், மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் என்பதையும் நான் இவர்களுக்கு ஞாபகப்படுத்திக் கொள்கிறேன்.
ஒட்டு மொத்த மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் செயற்பாட்டை நாம் என்றும் செய்யப்போவதில்லை.
நான் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்வரை இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ள இடமளிக்க முடியாது.
நாம் யாருடனும் ஒப்பந்தம் செய்துக் கொள்வதில்லை. எனவே, உரிய நேரத்தில் நாடாளுமன்றைக் கலைக்குமாறு நான் கேட்டுக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.