உலகம்
இத்தாலியில் மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்: வீடுகளுக்குள்ளேயே இருக்க அரசாங்கம் உத்தரவு

ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்
சீனாவுக்கு அடுத்ததாக கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி உள்ளது. இத்தாலியில் கொரோனோவால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் புதிதாக நோய் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை தினந்தோறும் கணிசமாக உயர்ந்து வருகிறது.

அந்த வகையில் இத்தாலியில் நேற்று மட்டும் 168 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதன் மூலம் உயிரிழந்தவர் எண்ணிக்கை 631 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கொரோனோ வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 10,149 பேராகும்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இத்தாலி அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அதன்படி இத்தாலியில் முதன் முதலாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, லோம்பார்டி பிராந்தியம் மற்றும் 14 மாகாணங்களுக்கு ஏற்கனவே ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள 1 கோடியே 60 லட்சம் மக்கள் கட்டாய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் பயணங்களை மேற்கொள்வதற்கும், அத்தியாவசிய தேவையை தவிர்த்து, வீடுகளை விட்டு வெளியே வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருமணங்கள், இறுதி சடங்குகள், மதவழிபாட்டு மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று இத்தாலி அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனினும் இதுபோன்ற கடுமையான தடுப்பு நடவடிக்கைக்கு மத்தியிலும் கொரோனோ வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் இத்தாலி அரசாங்கம் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை இத்தாலி முழுவதும் விரிவுப்படுத்தியுள்ளது.
அதாவது இத்தாலி முழுவதிலும் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கவும், அரசாங்கத்தின் அனுமதி இல்லாமல் பயணங்கள் மேற்கொள்ள கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த இத்தாலியின் பிரதமர் கியூசெப் கோண்டே கூறுகையில்:-
நாம் அனைவரும் இத்தாலியின் நன்மைக்காக எதையாவது விட்டுக் கொடுக்க வேண்டும். அதை நாம் இப்போதே செய்ய வேண்டும்.
அனைத்து குடிமக்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வலுவான மற்றும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.
இத்தாலி முழுவதையும் ஒரு பாதுகாக்கப்பட்ட மண்டலமாக மாறும் என்று கூறிய பிரதமர் மக்கள் பொது இடங்களில் கூடுவதை முற்றிலும் தவிர்த்து, வீடுகளுக்குள்ளேயே இருக்கும்படி கேட்டுக்கொண்டார்.
இத்தாலி முழுவதும் கால்பந்து போட்டிகள் உள்பட அனைத்து விளையாட்டு நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் April 3ம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என்றும் கூறினார்.
இதற்கிடையில் அரசாங்கம் விதித்துள்ள கடுமையான கட்டுப்பாடுகள் பொதுமக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சிறையிலுள்ள கைதிகளை அவர்களது உறவினர்கள் பார்க்க விதிக்கப்பட்டிருப்பதற்கு தடைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதனை கண்டித்து இத்தாலி முழுவதிலும் உள்ள சிறைகளில் கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதே போல் கைதிகளின் உறவினர்கள் சிறைக்கு வெளியே திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிறையிலுள்ள கைதிகள் கலவரத்தில் ஈடுபட்டு தப்பிக்க முயற்சிக்கின்றனர். நேற்று முன்தினம் இத்தாலி முழுவதிலும் உள்ள சிறையில் நடந்த கலவரத்தில் 12 கைதிகள் உயிரிழந்தனர்.