பாதுகாப்பு காரணமாக அக்கரைப்பற்று மத்திய சந்தை இன்று மூடப்பட்டது: சுய பாதுகாப்பையும் பொருட்படுத்தாது பொருட்கொள்வனவில் மக்கள் (30) இன்றைய நிலை……

வி.சுகிர்தகுமார்
நாட்டில் ஊரடங்கு சட்டம் இன்று காலை முதல் தளர்த்தப்பட்ட நிலையில் பொது மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப்பொருட்களை கொள்வனவு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருவதுடன் சில இடங்களில் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றாத நிலையினையும் காணமுடிகின்றது.
இதற்கமைவாக அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு சத்தோச உள்ளிட்ட தனியார் விற்பனை நிலையங்களிலும் மக்கள் வெள்ளம் இன்று காலை முதல் அலை மோதியதையும் அவதானிக்க முடிந்தது.
பாதுகாப்பு காரணமாக அக்கரைப்பற்று மத்திய சந்தை மூடப்பட்ட நிலையில் வீதி ஓரங்களில் அமைக்கப்பட்டிருந்த விற்பனை நிலையங்களில் மக்கள் தங்களது சுய பாதுகாப்பையும் பொருட்படுத்தாது பொருட் கொள்வனவில் ஈடுபட்டனர்.
இருந்தபோதிலும் பாதுகாப்பு படையினர் அர்ப்பணிப்போடு கடமையில் ஈடு படுத்தப்பட்டிருந்ததுடன் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ஆலோசனை வழங்கி வீடுகளுக்கு திருப்பி அனுப்புவதையும் காண முடிந்தது.
அத்தோடு அக்கரைப்பற்று பொலிசார் மற்றும் 241ஆம் படைப்பிரிவின் இராணுவத்தினர் களத்தில் நின்று மக்களுக்கு ஆலோசனை வழங்கி வருவதையும் பாதுகாப்பு தூரத்தினையும் கடைப்பிடிக்குமாறு அறிவறுத்தல் வழங்கியதுடன் மக்களை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தனர்.