இலங்கைக்கு மலேசிய அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

இலங்கை உள்ளிட்ட 13 நாடுகள், தங்களது நாட்டுக்கு அனுப்பிவைத்த பிளாஸ்ரிக் கழிவுகள் அடங்கிய 150 கொள்கலன்களை, மீள அனுப்பிவைக்க உள்ளதாக மலேசியா தெரிவித்துள்ளது.
தமது நாட்டை கழிவுகளை வெளியேற்றும் இடமாக்குவதற்கு சில நாடுகள் மேற்கொள்ளும் முயற்சி கனவு மாத்திரமே என அந்த நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சர் யெவோ பீ யின் தெரிவித்துள்ளார்.
பிளாஸ்ரிக் பொருட்கள் ஏற்றுமதியை சீனா கடந்த 2018ஆம் ஆண்டு நிறுத்தியதை அடுத்து அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் இருந்து தமது நாட்டுக்கு கழிவுகள் வர தொடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய 3737 மெற்றிக் டொன் பிளாஸ்ரிக் கழிவுகள் அடங்கிய 150 கொள்கலன்களில் பிரான்ஸூக்கு சொந்தமான 43 கொள்கலன்கள், ஐக்கிய அரபு ராஜ்ஜியத்துககு சொந்தமான 42 கொள்கலன்கள், அமெரிக்காவுக்கு சொந்தமான 11 கொள்கலன்களும் அடங்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் எஞ்சிய கொள்கலன்கள் இலங்கை, ஜப்பான், சிங்கப்பூர், போர்த்துக்கல், லித்துவெனியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளால் அனுப்பபட்டதாக மலேசிய சுற்றுச்சூழல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனவே குறித்த பிளாஸ்ரிக் கழிவுகள் அடங்கிய 150 கொள்கலன்களை, அந்தந்த நாடுகளுக்கு மீள அனுப்பிவைக்கவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.