ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவிலிருந்து கணேசபிள்ளை நிரோஷன் நாடகத்துறையில் ‘சுவதம்’ கலைஞர் விருது வழங்கி கௌரவிப்பு….

-M.கிரிசாந்-
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணை மற்றும் வழிகாட்டலில் அம்பாறை மாவட்ட செயலகம் அனைத்து பிரதேச செயலகங்களோடு இணைந்து ஏற்பாடு செய்திருந்த மாவட்டத்தின் ”சுவதம் கலைஞர் விருது” வழங்கும் கௌரவிப்பு – 2021 நிகழ்வு அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் தலைமையில் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரி.எம். றிம்சான் ஒருங்கிணைப்பில் அக்கரைப்பற்று பிரதேச செயலக மண்டபத்தில் கடந்த (08) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இவ் நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவிலிருந்து நாடகத்துறையில் இருந்து சுவதம் கலைஞர் விருது வழங்கி கணேசபிள்ளை நிரோஷன் அவர்கள் கௌரவிக்கப்பட்டார். மேலும் பல துறைகளிலும் இருந்து கலைஞர்கள் பலருக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
வருடம் தோறும் நடைபெற்று வரும் ‘சுவதம்’ கலைஞர் விருது வழங்கும் நிகழ்வின் போது ஒவ்வொரு பிரதேச செயலகத்தில் இருந்தும் தெரிவு செய்யப்படும் பத்து கலைஞர்களை கௌரவிப்பது வழமையாகும். இம்முறை நாட்டில் ஏற்பட்டிருந்த Covid -19 கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒவ்வொரு பிரதேச செயலகத்தில் இருந்தும் 06 கலைஞர்களை கௌரவிப்பதற்காக கலாசார அலுவல்கள் திணைக்களத்தின்அனுசரணை வழங்கப்பட்டிருந்தது.
அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ்மொழி மூலமான 13 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட 87 கலைஞர்கள் இங்கு கௌரவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கு நினைவுச் சின்னம், சான்றிதழ், கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பெயர் பொறிக்கப்பட்ட லெப்டொப் பேக் என்பன சிறப்புப் பரிசாக வழங்கி இவர்கள் கெளரவிக்கப்பட்டார்கள்.
இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எம்.ஏ.டக்ளஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன். காரைதீவு பிரதேச செயலாளர் சி. ஜெகராஜன், திருக்கோவில் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி. பபாகரன், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.அஹமட் சாபீர், அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் அஷ்செய்க் ரி.எம்.எம். அன்சார், சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எம்.ஹனீபா, நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ். ரங்கநாதன், கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாக்கத் அலி, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம் ஆஷிக், இறக்காமம் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி அஹமட் நசீர் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இவ் நிகழ்வில் ஆலையடிவேம்பு நர்த்தன சிவாலய கலை மன்ற மாணவி கோபிகா வரவேற்பு நடனம் வழங்கி இருந்தமையும் சிறப்புற்று இருந்தது.