ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சகல பொதுமக்களுக்குமான பிரதேச செயலாளரின் அறிவித்தல்!

COVID-19 தனிமைப்படுத்தல் நடைமுறையிலிருந்து எமது ஆலையடிவேம்பு பிரதேசம் இதுவரை முற்றுமுழுதாக விடுவிக்கப்படாத சூழ்நிலையில், கடந்த சில நாட்களாக நிலவும் மழையுடனான காலநிலையால் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பல கிராம சேவகர் பிரிவுகள் வெள்ள நீரால் சூழப்பட்டு, அப்பிரதேசங்களில் வாழும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் வசிக்கமுடியாத மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதை அறிந்துள்ளோம்.
எனினும், உயிர்க்கொல்லி நோயாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள COVID-19 பரவுதலிலிருந்து எமது பிரதேசம் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள இத்தருணத்தில், வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கான இடைத்தங்கல் முகாம்களை அமைப்பதில் ஏற்பட்டுள்ள நடைமுறைப் பிரச்சனைகளை நாம் கவனத்திலெடுக்கவேண்டிய நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதை பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தவேண்டிய தேவை எழுந்துள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள மக்களை ஒன்றுதிரட்டி இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கும் சந்தர்ப்பத்தில், அம்முகாம்களில் தங்கியிருக்கக்கூடிய மக்களிடையே COVID-19 பரவல் மீளவும் அதிகரிக்கக்கூடிய அச்சநிலை மேலோங்கியுள்ளதைப் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அனைவரும் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறோம்.
இருப்பினும் வெள்ள நீர் வீடுகளுக்குள் உட்புகுந்த காரணத்தினால் தமது இருப்பிடங்களில் தொடர்ந்தும் வசிக்கமுடியாத சூழலை எதிர்கொண்டுள்ள பொதுமக்கள் அதுதொடர்பாக உடன் உங்களது கிராம சேவகர் பிரிவுக்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தருக்கு நிலைமையை அறிவித்து, அவரது மேற்பார்வையுடன் உங்களுக்குப் பாதுகாப்பானது எனக் கருதும் உறவினர்களின் வீடுகளில் தற்காலிகமாகத் தங்கியிருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். எனினும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அக்கரைப்பற்று – 8/1, அக்கரைப்பற்று – 8/3 மற்றும் அக்கரைப்பற்று – 9 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் இவ்விடயத்தில் உங்களது கிராம உத்தியோகத்தரது ஆலோசனைக்கமைவாக மாத்திரமே செயற்படுமாறு அறிவுறுத்துகின்றோம்.
அத்துடன், அவ்வாறு உறவினர் வீடுகளில் தங்கியிருக்கக்கூடிய பொதுமக்களின் விபரங்களைச் சம்மந்தப்பட்ட கிராம உத்தியோகத்தர்கள் மூலம் பெற்றுக்கொண்டு, அவர்களுக்கான உலர் உணவுகள் மற்றும் சமைத்த உணவுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் எமது ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்ற தகவலையும் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அறியத்தருகின்றோம். என ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் அறிவித்தல் விடுத்துள்ளார்.