ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் முதலாம் நாளாகிய இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் உற்சாகத்துடன் பங்கெடுப்பு…

-ஜினுர்ஷன், வதுர்ஷன்-
ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று (24) முதல் சினோபாம் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கையின் முதலாம் நாள் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி திருமதி எஸ்.அகிலன் மேற்பார்வையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு 2500 தடுப்பூசிகள் கிடைக்கப்பட்ட நிலையில்.
இன்றையதினம் ஆயிரத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் பயனாளர்களுக்கு ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, கோளாவில் விநாயகர் மகாவித்தியாலயம் மற்றும் அக்கரைப்பற்று இராமகிருஸ்ண தேசிய பாடசாலை ஆகிய மூன்று நிலையங்களில் பிரதேச காதார வைத்திய அதிகாரியின் மேற்பார்வையில் செலுத்தப்பட்டது.
இதில் ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் 3 மாதங்களை கடந்த கர்ப்பிணி தாய்மார்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதுடன். கோளாவில் விநாயகர் மகாவித்தியாலயம் மற்றும் அக்கரைப்பற்று இராமகிருஸ்ண தேசிய பாடசாலை ஆகிய நிலையங்களில் ஆசிரியர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், உள்ளிட்ட அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச 30 வயதிற்கு மேற்பட்டவர்களும் , 60 வயதுக்கு மேற்பட்ட ஒருசிலரும் இன்றைய தினம் தடுப்பூசியை பெற்றுக்கொண்டனர்.
மேலும் இன்றைய தினம் ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் த.கிரோஜாதரன், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகளும் தடுப்பூசியை செலுத்திக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாளைய தினம் (25) தடுப்பூசி செலுத்துவதற்கு ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் 60 வயதினை கடந்தவர்களுக்கு மாத்திரம் தடுப்பூசிகள் ஏற்றப்படும் எனவும் கோளாவில் விநாயகர் மகாவித்தியாலயம் மற்றும் அக்கரைப்பற்று இராமகிருஸ்ண தேசிய பாடசாலை ஆகிய நிலையங்களில் 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாம் எனவும் ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி திருமதி எஸ் அகிலன் தெரிவித்தார்..