ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் த.கிரோஜாதரன் தலைமையில் இடம்பெற்ற துறைசார் அதிகாரிகளின் கருத்தறியும் நிகழ்வும் அறிமுக நிகழ்வும்

வி.சுகிர்தகுமார்
ஆலையடிவேம்பு பிரதேச சபையின் புதிய தவிசாளராக த.கிரோஜாதரன் நியமிக்கப்பட்டு பதவியேற்றதை தொடர்ந்து முதல் தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட திணைக்கள தலைவர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகளின் கருத்தறியும் நிகழ்வும் அறிமுக நிகழ்வும் இன்று (15) பிரதேச சபை ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
தவிசாளர் த.கிரோஜாதரன் தலைமையில் இடம்பெற்ற கருத்தறியும் ஒன்று கூடல் நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் மற்றும் மின்சார சபை அத்தியட்சகர், சட்டத்தரணிகள், கல்வி அதிகாரிகள் பொலிசார் இராணுவ அதிகாரிகள் பிரதேச சபை செயலாளர், தொழிநுட்ப உத்தியோகத்தர் , துறைசார் அதிகாரிகள் ஊடகவியலாளர்கள் சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஆக்க பூர்வமான முறையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது. இதன் பின்னர் புதிய தவிசாளருக்கு அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். தொடர்ந்து தவிசாளர் கருத்தறியும் ஒன்று கூடல் ஏற்பாடு செய்யப்பட்டதன் நோக்கம் பற்றி விளக்கினார். இருக்கின்ற காலத்தினுள் அனைவரது ஒத்துழைப்போடும் பிரதேச சபையினை முன்னெடுத்து செல்வது தொடர்பிலும் கவனம் செலுத்துவதுடன் இருக்கின்ற மக்கள் பிரச்சினை தொடர்பில் தீர்வினை காணும் பொருட்டு பல்வேறு திணைக்கள அதிகாரிகள் வழங்க வேண்டி பங்களிப்பு தொடர்பிலும் கருத்துக்களை முன்வைத்தார். அத்தோடு பிரதேச சபையானது பல்வேறு திணைக்களங்களின் ஒத்துழைப்போடு தமது செயற்பாட்டினை முன்னெடுத்துச் செல்லும் எனவும் குறிப்பிட்டார்.
இதேநேரம் பிரதேச சபை உறுப்பினர்களும் காணி மற்றும் களப்பு முகாமைத்துவம் கழிவகற்றல் முகாமைத்தவ செயற்பாடு உள்ளிட்ட பிரதேச சபை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பொலிசார் செயற்பாடுகள் தொடர்பில் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
இக்கருத்தறியும் கலந்துரையாடலில் கலந்து கொண்ட பல்வேறு திணைக்கள தலைவர்களும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்த நிலையில் பிரதேச செயலகம் சார்பில் பிரதேச செயலாளரும் அவரது கருத்தினை பதிவு செய்தார்.
சமூகத்தில் அதிகமானவர்கள் மற்றவர்கள் மீது குறை கூறுவதனையே வழக்கமாக கொண்டுள்ளனர். இக்கலாசாரம் மாற்றப்படவேண்டும். குறை சொல்வதை தவிர்த்து தவறு செய்கின்றவர்களிடம் நேரடியாக சென்று அவற்றை குறிப்பிட்டு வழிநடத்துவோம். மேலும் வெளிப்படைத்தன்மையுடன் அனைத்து விடயங்களையும் முன்னெடுப்போம். இதனை மையமாக கொண்டே பிரதேச செயலக நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. முடிந்தவரை பிரதேச சபையோடும் இணைந்து பணியாற்றுவோம் என்றார்.
இங்கு சட்டத்தரணிகளும் பிரதேச சபையின் அதிகாரம் தொடர்பில் அவர்களது கருத்துக்களை முன்வைத்தனர். அத்தோடு மின்சார சபை அத்தியட்சகரும் ஒத்துழைப்பை வழங்குவதாக கூறியதுடன் கல்வி அதிகாரிகளும் கல்வி சார்ந்து விடயங்களையும் வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரி வீதி அமைத்தல் தொடர்பான பிரச்சினைகளையும் முடிந்தவரை முன்னெடுப்பதாக கூறினார்.
இதேநரம் பிரதேசத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வரும் நிலையில் அவற்றை தடுப்பதற்கு தங்களுடன் இணைந்து பிரதேச சபை உள்ளிட்ட பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என இராணுவத்தினரும் பொலிசாரும் கோரிக்கை விடுத்தனர்.
இறுதியில் இருக்கின்ற காலத்தினுள் பிரதேச சபை தமக்கென ஒரு அடையாளத்தை நிலை நிறுத்தும் வகையில் சிறந்த வேலைத்திட்டமொன்றையேனும் முன்னெடுக்க வேண்டும் எனும் கோரிக்கை பலராலும் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.