ஆலையடிவேம்பு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பிரதான வீதிகளில் கட்டாக்காலி மாடுகள் வீதியை மறித்து பொதுப் போக்குவரத்துக்கு இடைஞ்சல்: பிரதேச புத்திஜீவிகளும் ஆதங்கம்….

ஆலையடிவேம்பு பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு சில மாதங்களாக கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதனால் பொதுப்போக்குவரத்துக்கு இடைஞ்சலாகவும் விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக காணப்படுவதாக மக்கள் விசனப்பட்டு இருந்தபோதிலும் எவரும் கண்டுகொள்ளாத நிலை தொடர்ந்து வந்தது.
அந்த வகையில் நேற்றய தினமும் (08) மாலை 7.30 மணியளவில் சாகாம பிரதான வீதியில் கட்டாக்காலி மாடுகள் வீதியினை மறித்து பொதுப்போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருந்த நிலையில் சட்டத்தரணி கு.ஜெகசுதன் ஐயா தனது முகநூல் பக்கத்தில் சம்மந்தப்பட்டவர்கள் மீது தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார்.
” ஆலையடிவேம்பு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட சாகாம பிரதான வீதியில் கட்டாக்காலி மாடுகள் வீதியினை மறித்து நிற்கும் நிலை, இது ஆலையடிவேம்பு பிரதேச சபை செயலாளரின் கவனத்திற்கு “இது இலங்கை தண்டனை சட்டக்கோவையின் பிரிவு 162 ன் படி எவரேனுமாளுக்கு அல்லது அரசாங்கத்திற்கு ஊறு ஏற்படுத்தும் உளக்கருத்துடன் பகிரங்க சேவையாளர், சட்டப் பணிப்புக்கு கீழ்படியாமை” தொடர்பானதாகும் விரைந்து செயற்ப்படுக இல்லையேல் சட்டம் தன் கடமையை செய்யும். ” என்றவாறு பதிவிட்டு இருந்தார்.
இவற்றிற்கு பிறகும் எதிர்வருகின்ற காலங்களில் சம்மந்தப்பட்டவர்கள் உரிய முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் சம்மந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சட்டத்தரணி கு.ஜெகசுதன் ஐயா அவர்களிடம் ஆலையடிவேம்புவெப் இணையக்குழு சார்பாக கோரிக்கையினை முன்வைக்கின்றோம்.