ஆலையடிவேம்பு பிரதேச இந்து சமய தலைவர்கள் மற்றும் அறநெறி ஆசிரியர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நெறி – பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் இடம்பெற்றது.

வி.சுகிர்தகுமார்
அக்கரைப்பற்று விபுலானந்தா அபிவிருத்தி நிலைய ஒன்று கூடல் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்ற இந்து சமய தலைவர்கள் மற்றும் அறநெறி ஆசிரியர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நெறி இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் இடம்பெற்றது.
இப் பயற்சி நெறியில் அம்பாரை மாவட்ட கலாசார உத்தியோகத்தர்களான கே.ஜெயராஜ், என்.பிரதாப், ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் நிசாந்தினி தேவராஜ் மற்றும் அறநெறி ஆசியர்கள் ,பிரதேச ஆலயங்கள், இந்து சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
செயலமர்வின் நோக்கம் மற்றும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் இந்து அமைப்புக்களிடம் எதிர்பார்க்கும் விடயங்கள் தொடர்பில் கலாசார உத்தியோகத்தர்கள் தெளிவூட்டியதுடன் .
இதன் பின் தலைமை உரையாற்றிய பிரதேச செயலாளர் வி.பபாகரன் ஆலயங்கள் வெறுமனே கும்பாபிசேகம் பூஜை வழிபாடுகள் என்பவற்றோடு நின்று விடாது சமூகப்பணிகளையும் முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும் எமது பாரம்பரிய நிகழ்வுகளை பிற மதங்களும் நாடுகளும் இல்லாமல் செய்து விட்டு அவர்கள் பின்பற்றுவதை காண முடிகின்றது. ஆகவே மறைக்கப்பட்டுவரும் தமிழர்களின் பாரம்பரியத்தை காப்பாற்ற வேண்டியது ஆலய நிருவாகத்தின் கடமை என்றார்.
இதேநேரம் வளவாளராக கலந்து கொண்ட மேலதிக அரசாங்க அதிபர் விளக்கமளிக்கையில்
வசதி படைத்தவர்களிடம் இருந்து நிதியை பெற்று வருமானம் குறைந்த மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதனையே ஒரு காலத்தில் ஆலயங்கள் மேற்கொண்டன. ஆனால் இன்று வருமானம் இல்லாத மக்களிடம் இருந்து நிதி அறவீடு செய்து ஆலயங்கள் அமைக்கப்படுகின்றன. இந்த நிலை மாறவேண்டும். முடிந்தவரை ஆலயங்கள் மக்களின் நலனுக்காக பாடுபட வேண்டும் என்றார்.
மேலும் ஆலயங்கள் தொடர்பான பிரச்சினைகள் அக்கிராமத்தினுள்ளேயே தீர்க்கப்படவேண்டும் எனவும் வீணே நீதிமன்றம் வரை செல்லும் நடவடிக்கை நிறுத்தப்படவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
பயிற்சி செயலமர்வில் குழுச் செயற்பாடும் இடம்பெற்றதுடன் எதிர்காலத்தில் ஆலயங்கள் மேற்கொள்ள கூடிய திட்டங்கள் தொடர்பிலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.