ஆலையடிவேம்பில் 5000 ரூபா கொடுப்பனவு தொடர்பான தகவல்களை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும் – முறைப்பாட்டை நேரடியாக பிரதேச செயலகத்தில் எழுத்து மூலம் முன்வைக்கவும் முடியும்.

வி.சுகிர்தகுமார்
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் கொரேனா அச்சுறுத்தல் காரணமாக பாதிக்கப்பட்ட 7899 குடும்பங்களுக்கு பல்வேறு சமூக நலத்திட்டத்தின் கீழ் 5000 ரூபா கொடுப்பனவாக 3கோடியே 94 இலட்சத்திற்கும் மேற்பட்ட தொகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கே.லவநாதன் இது தொடர்பான விபரங்களை பிரதேச செயலகத்தில் பார்வையிட முடியும் எனவும் குறிப்பிட்டார்.
இதனடிப்படையில் சமுர்த்தி பயனாளிகள் 4712 பேருக்கும் காத்திருப்போர் பட்டியலில் உள்ள 1448 பேருக்கும் தொழில் பாதிக்கப்பட்ட 745 பேருக்கும் முதியோர்களுக்கான கொடுப்பனவாக 671 முதியவர்களுக்கும் அங்கவீனர்கள் 312 பேருக்கும் நோய் மற்றும் 100 வயதை கடந்த 11 பேருக்கும் இக்கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் தற்போது கிடைக்கப்பெற்றுள்ள மேன்முறையீட்டு விண்ணப்பங்களுக்கு அமைய 70 பேருக்கான கொடுப்பனவை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறித்த நிதி பெற்றுக்கொள்ளப்பட்டதும் உரியவர்களுக்கு வழங்கி வைக்கப்படும் எனவும் கூறினார்.
இது தொடர்பில் தகவல்களை பெற்றுக்கொள்ள விரும்பும் பொதுமக்கள் பிரதேச செயலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டார்.
இதேநேரம் கொடுப்பனவுகள் யாவும் உரிய முறைப்படி வழங்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் சந்தேகங்கள் அல்லது முறைப்பாடுகள் தெரிவிக்க விரும்கின்றவர்கள் நேரடியாக பிரதேச செயலகத்திற்கு வருகை தந்து தங்களது குறைபாடுகளை எழுத்து மூலம் முன்வைக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.