ஆலையடிவேம்பில் கால்நடைகளின் தங்குமிடமாக மாறிவரும் பிரதான வீதிகள்!

(வி.சுகிர்தகுமார்)
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் கால்நடைகளின் தங்குமிடமாக மாறிவரும் பிரதான வீதிகளினால் பல்வேறு அசௌகரியங்களை பொதுமக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.
இதனால் நாளாந்தம் பல்வேறு விபத்துக்களை பொதுமக்கள் எதிர்கொண்டு வருவதுடன் வீதிகளும் அசுத்தமாக மாறிவருவதனை காண முடிகின்றது.
இரவுவேளை மாத்திரமன்றி பகல் நேரத்திலும் அதிகளவான கால்நடைகள் வீதிகளில் அலைந்து திரிவதை அவதானிக்க முடிகின்றது.
ஆயினும் இதுவரையில் இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அலுவலகங்களோ அல்லது அதிகாரிகளோ பாதுகாப்பு தரப்பினரோ நடவடிக்கை எடுக்காமல் உள்ளமையும் கவலை அளிப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இதனால் ஏற்படப்போகும் விபத்துக்களில் உயிரிழப்புக்கள் ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாத நிலை உருவாகி வருவதையும் சுட்டிக்காட்ட முடிகின்றது.
ஆகவே இது தொடர்பில் சம்மந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதுடன் கால்நடை உரிமையாளர்களும் பொறுப்புடன் செயற்படுவது காலத்தின் கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.