வடகொரியாவின் கிறிஸ்மஸ் பரிசு தயாரா? அதிர்ச்சியில் அமெரிக்கா

சர்வதேசத்தின் கருத்துகளையும், அறிவுறுத்தல்களையும் செவிமடுக்காது செயற்பட்டுவரும் வடகொரியா, ஏவுகணைகளை உருவாக்குவதற்கான தளபாடங்களின் உற்பத்தியை விரிவுபடுத்துவதாகத் தெரிகின்றது.
இந்த மாதம் 31ஆம் திகதிக்குள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா அழைப்பு விடுக்காவிட்டால், அந்த நாட்டுக்கு ‘கிறிஸ்மஸ் பரிசாக அதிர்ச்சியளிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக வட கொரியா எச்சரித்துள்ள நிலையில், இந்த செய்தியானது அமெரிக்காவை சற்று அச்சமடைய வைத்துள்ளது.
வட கொரியாவில் பாதுகாப்புத் தளபாடங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் கூடுதல் கட்டடங்கள் எழுப்பப்பட்டு வருவது கடந்த 19ஆம் திகதி எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த 7ஆம் திகதி எடுக்கப்பட்ட படங்களுடன் ஒப்பிடுகையில், தற்போது எடுக்கப்பட்டுள்ள படத்தில் கூடுதல் கட்டடங்கள் இடம்பெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கும், தென் கொரியாவுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், ஐ.நா. தடையையும் மீறி அணு ஆயுதங்களையும், நீண்ட தொலைவு ஏவுகணைகளையும் வட கொரியா சோதித்து வந்தது. அதற்குப் பதிலடியாக ஐ.நா. பாதுகாப்பு சபையிலும், அமெரிக்காவும் அந்த நாடு மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.
இந்தச் சூழலில், தனது அணு ஆயுதங்களையும், சக்தி வாய்ந்த ஏவுகணையையும் கைவிடுவதாக வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன் கடந்த ஆண்டு ஆரம்பத்தில் அறிவித்தார். அதனை ஏற்றுக் கொண்ட அமெரிக்க தலைவர் டொனால்ட் ட்ரம்ப், இதுகுறித்து கிம் ஜோங்-உன்னை 3 முறை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
எனினும், வட கொரியா மீதான பொருளாதாரத் தடையை உடனடியாகத் தளர்த்த ட்ரம்ப் மறுத்ததையடுத்து, இருதரப்பு பேச்சுவார்த்தை முறிவடைந்தது.
இதனைத் தொடர்ந்து,இருநாடுகளுக்கிடையிலான பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையில், இருநாடுகளும் பேச்சுவார்த்தையை கைவிடுவதாக அறிவித்தன. அதுமட்டும் இன்றி இந்த அறிவிப்பை வெளியிட்ட ஒரு வாரத்துக்குள் அடுத்தடுத்து 2 முறை முக்கிய சோதனைகளை நடத்தி வடகொரியா அதிரவைத்தது.
இதற்கிடையில், வட கொரியா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளைத் தளர்த்த வேண்டுமென, ஐக்கிய நாடுகள் சபையிடம் ரஷ்யாவும், சீனாவும் வலியுறுத்தியுள்ளன.