இங்லீஷ் பீரிமியர் லீக்: 30 வருடங்களுக்கு பிறகு முதல்முறையாக சம்பியன் கிண்ணத்தை வென்றது லிவர்பூல் அணி!

இங்கிலாந்தில் நடைபெறும் கால்பந்து கழகங்களுக்கிடையிலான இங்லீஷ் பீரிமியர் லீக் கால்பந்து தொடரில், முதல் முறையாக லிவர்பூல் அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளது.
இந்த தொடர் இன்னமும் நிறைவு பெறாத நிலையில், புள்ளிபட்டியலில் லிவர்பூல் அணி 86 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. மன்செஸ்டர் சிட்டி அணி 63 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
எஞ்சியுள்ள போட்டிகளில் மன்செஸ்டர் சிட்டி அணி அல்லது வேறு அணிகள் அனைத்து போட்டிகளில் வெற்றிபெற்றாலும், 23 புள்ளிகள் முன்னிலையில் முதலிடத்தில் உள்ள லிவர்பூல் அணியை பின்தள்ளுவது என்பது சாத்தியமற்றது.
ஆகையால், இங்லீஷ் பீரிமியர் லீக் கால்பந்து வரலாற்றில் முதல்முறையாக மகுடம் சூடும் வாய்ப்பு லிவர்பூல் அணிக்கு கிடைத்துள்ளது.
தற்போது வரை, லிவர்பூல் அணி நடப்பு தொடரில் இதுவரை 31 போட்டிகளில் விளையாடி 28 வெற்றிகள், 2 சமநிலை, 1 தோல்வி என 86 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
மன்செஸ்டர் சிட்டி அணி 31 போட்டிகளில் விளையாடி 20 வெற்றிகள், 3 சமநிலை, 8 தோல்விகள் என 63 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
லெய்செஸ்டர் சிட்டி அணி, 31 போட்டிகளில் விளையாடி 16 வெற்றிகள், 7 சமநிலை, 8 தோல்விகள் என 55 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
2019-2020ஆம் ஆண்டுக்கான நடப்பு சீசன் கடந்த ஆண்டு நவம்பர் 23ஆம் திகதி தொடங்கியது. 20 கழக அணிகள் பங்கேற்ற இத்தொடர், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 10ஆம் திகதி இடை நிறுத்தப்பட்டது. பின்னர் ஜூன் 18ஆம் திகதி மீண்டும் ஆரம்பமானது. அப்போதே லிவர்பூல் அணிக்கு தான் சம்பியன் கிண்ணம் என தீர்மானிக்கப்பட்டிருந்து. இந்த தொடர் ஜூலை 26ஆம் திகதி நிறைவடையவுள்ளது.