மற்றுமொரு இனரீதியிலான மோதலுக்கு புதிய அரசியலமைப்பு வழிவகுக்கக் கூடாது!

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்காமல் அந்த முறையை தொடர்ந்தும் தக்கவைக்க வேண்டுமென முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
மேலுமொரு இனரீதியிலான மோதலுக்கு வழிவகுக்காமல் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் எனவும் அந்தக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட, சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையிலான நிபுணர் குழுவில் பல்வேறு அரசியல் கட்சிகளும் யோசனைகளை முன்வைத்து வருகின்றன.
அந்த வகையில் முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பல்வேறு யோசனைகளை முன்வைத்துள்ளது.
இந்த யோசனைகள் மற்றும் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து மகாநாயக்க தேரர்களை கண்டியில் இன்றைய தினம் சந்தித்த முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர் பல்வேறு விடயங்களையும் ஆராய்ந்துள்ளனர்.
மகாநாயக்க தேரர்களிடம் ஆசிபெற்றுக்கொண்டதன் பின்னர் கண்டியில் ஊடகவியலாளர் சந்திப்பையும் அவர்கள் இன்றைய தினம் நடத்தினர்.
இதன் போது நிமல் சிறிபால டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில்,
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை பற்றி நீண்டநேரம் நாங்கள் கலந்துரையாடினோம். இந்த முறைமையில் நன்மையான விடயங்களும் அதேபோல சில தீமையான விடயங்களும் உள்ளன. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படக்கூடாது.
நாடாளுமன்றத்திற்கு மாத்திரம் முழு அதிகாரத்தையும் வழங்கிவிட்டால் தலையை விட வால் நிர்வகிக்கக்கூடிய நிலைமையே ஏற்படும். பிரிவினைவாத மற்றும் சிறுபான்மைக் கட்சிகள் நாட்டின் பாரதூரமான நிலைமையில் தீர்மானங்களை எடுக்கக்கூடிய நிலைமையின்போது அரச தலைவருக்கு நாடாளுமன்றத்திற்கு அழுத்தம் பிரயோகிக்ககூடிய சந்தர்ப்பம்கூட இருக்காது.
அதேபோல நாட்டின் தலைவர் தமிழ், சிங்களம், முஸ்லிம் என இல்லாமல் அனைத்து மக்களினாலும் தெரிவுசெய்யப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த ஊடக சந்திப்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், மேலும் பல யோசனைகளை புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பற்றிய நிபுணர் குழுவிடம் முன்வைத்திருப்பதாக தெரிவித்தார்.
அதற்கமைய, புதிய அரசியலமைப்பு பிளவுபடுவதற்ககான காரணமாகக்கூடாது, பௌத்த மதத்திற்கு முன்னுரிமை, தமிழ், சிங்கள,முஸ்லிம் என பாடசாலைகள் பிரிக்கப்படாமல் பொதுவான பாடசாலை கட்டமைப்பு, மாவட்ட ரீதியில் மேன்முறையீடு செய்வதற்கான உரிமை, மாகாண மட்டத்தினை விடவும் மாவட்ட ரீதியில் அதிகாரப் பரவலாக்கல், இரட்டைக் குடியுரிமை உள்ளவர்களுக்கு தேர்தலில் போட்டியிட மற்றும் அரசாங்கப் பதவிகளை வகிக்க இடமளிக்கக்கூடாது உள்ளிட்ட யோசனைகளும் முன்வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்