அருள்மிகு ஸ்ரீ பட்டி நகர் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்ச்சி உற்சவம் நாளை…

அருள்மிகு ஸ்ரீ பட்டி நகர் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்ச்சி உற்சவம் யாகசாந்தி பூஜை கடந்த (29) இடம்பெற்று (30.05.2023) அன்று திருக்கதவு திறத்தல் சடங்கு இடம்பெற்று அம்மன் குளிர்ச்சி உற்சவம் இடம்பெற்று வருகின்றது.
அந்த வகையில் இன்றைய தினம் (02.06.2023) மூன்று கால பூசைகள் இடம்பெறுவதுடன் நேர்த்திகள், மாலை 7.00 மணிக்கு விசேட அபிஷேகம் இடம்பெற இருப்பதுடன் இன்றைய நாளுக்கான அன்னதானத்தினை மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம் – பனங்காடு , மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம் – சின்னப்பனங்காடு மற்றும் பொதுமக்கள் ஆகியவர்கள் வழங்கி இருந்தனர்.
குறித்த ஆலயம் கிழக்கு இலங்கையில் வரலாற்று பிரசித்தி பெற்றதும் மிகவும் பழமையானதும் பட்டி மேடு கண்ணகி அம்மன் காவியம், பொற் புறா வந்த காவியம் ,மழைக்காவியம் என இலங்கையிலேயே முக்காவிய சிறப்பு பெற்றதும் மழவராயன் சிற்றரசர் வழி வந்த மங்கலப் போடி, மானாகப் போடி போன்ற பல கப்புகர்களால் நிர்வகிக்கப்பட்டு ,பூசை செய்யப்பட்டதுடன்.
அதன் பின்னர் மழவராயர் கப்புகன் ஆட்சிக்கு உட்பட்டு கண்டி அரசன் மற்றும் ஆங்கிலேயர் ஆளுநரால் மானியம் வழங்கப்பட்டதும் பின்னர் மழவராயர் பஞ்சாயத்து சபையால் நிர்வகிக்கப்பட்டும் இன்று வரை மழவராயர் மரபு வழி வந்த வழித்தோன்றல்களால் மரபுரிமை செய்யப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வரும் மிகவும் தொன்மை வாய்ந்ததும், தன்னை நாடி வரும் பக்தர்களின் நோய் பிணியகற்றி பக்தர்களுக்கு அற்புதங்கள் பல காட்டி அருள் பாலித்து வருவதாகவும் அருள்மிகு ஸ்ரீ பட்டி நகர் கண்ணகி அம்மன் ஆலயமாகவும் விளங்கிவருகிறது.
குறித்த ஆலயத்தின் அம்மன் வைகாசி திருக்குளிர்ச்சி உற்சவம் எதிர்வரும் (03.06.2023) அன்று இடம்பெற இருப்பதுடன் திருக்குளிர்த்தி தீர்த்த உற்சவம் மற்றும் அம்மன் திருக்கதவு சாத்துதல் நிகழ்வுகளும் அன்றைய தினம் இடம்பெற இருக்கின்றது.