பிக் பேஷ்: நான்காவது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது சிட்னி சிக்ஸர்ஸ் அணி!

பிக் பேஷ் ரி-20 லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கான முதலாவது தகுதிப் போட்டியில், சிட்னி சிக்ஸர்ஸ் அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்று நான்காவது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.
கன்பெர்ரா மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற இறுதிப் போட்டிக்கான முதலாவது தகுதிப் போட்டியில், சிட்னி சிக்ஸர்ஸ் அணியும் பெர்த் ஸ்கொர்சர்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பெர்த் ஸ்கொர்சர்ஸ் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பெர்த் ஸ்கொர்சர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜோஸ் ங்கீலிஷ் ஆட்டமிழக்காது 69 ஓட்டங்களையும் டெர்னர் 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
சிட்னி சிக்ஸர்ஸ் அணியின் பந்துவீச்சில், த்வர்ஷுயிஸ் 2 விக்கெட்டுகளையும் பேர்ட், அபோட், ஸ்டீவ் ஒகீப், பிரத்வெயிட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 168 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய சிட்னி சிக்ஸர்ஸ் அணி, 17 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் சிட்னி சிக்ஸர்ஸ் அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்று நான்காவது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜேம்ஸ் வின்ஸ் ஆட்டமிழக்காது 98 ஓட்டங்களையும் ஜோஸ் பிலிப்பே 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பெர்த் ஸ்கொர்சர்ஸ் அணியின் பந்துவீச்சில், லியாம் லிவிங்ஸ்டோன் 1 விக்கெட்டினை வீழ்த்தினார்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 53 பந்துகளில் 1 சிக்ஸர் 14 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 98 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஜேம்ஸ் வின்ஸ் தெரிவுசெய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ள சிட்னி சிக்ஸர்ஸ் அணி, பெப்ரவரி 6ஆம் திகதி நடைபெறவுள்ள மகுடத்திற்கான இறுதிப் போட்டியில் களமிறங்கவுள்ளது.
சிட்னி சிக்ஸர்ஸ் அணி முன்னதாக 2011-12ஆம் மற்றும் 2019-20ஆம் பருவ காலங்களில் என இரண்டு முறை சம்பியன் பட்டங்களை வென்றுள்ளது. அதேபோல 2014-15ஆம் மற்றும் 2016-17ஆம் பருவ காலங்களில் என இரண்டு முறை இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.