நல்லாட்சியில் வழங்கப்படாத மின்சாரத்தை இந்த ஆட்சியிலாவது வழங்கி எமது தோட்டங்களை காப்பாற்றுங்கள்- ஆலையடிவேம்பு பிரதேச தென்னம் தோட்ட செய்கையாளர்கள் குமுறல்….

வி.சுகிர்தகுமார்
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட புளியம்பத்தை கிராமத்தை அன்மித்த பிரதேசங்களில் தென்னம் தோட்ட செய்கையில் ஈடுபடும் தோப்பு உரிமையாளர்களே இவ்வாறு கோரிக்கை விடுக்கின்றனர்.
குறித்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் தென்னம் தோப்புக்களை நாளாந்தம் யானைகள் துவம்சம் செய்து வருகின்றது. இந்நிலையில் யானை வேலிகள் அமைக்கும் பணிகளும் முறையாக இடம்பெறவில்லை. இதனால் கிராமத்திற்குள் நுழைந்துள்ள யானைகள் நாளாந்தம் பலரது சொத்துக்களையும் தென்னம் தோப்புக்களையும் அழித்து வருகின்றது.
நேற்றிரவு குறித்த தென்னம்தோப்பில் நுழைந்த யானைகள் அங்கு அமைக்கப்பட்டிருந்த வேலியினை உடைத்தெறிந்ததுடன் தென்னம் கன்றுகளையும் துவம்சம் செய்துள்ளது. இதற்கு முன்னரும் குறித்த பிரதேங்களில் பல தென்னங்கன்றுகள் நாசம் செய்யப்பட்டுள்ளது.
இதில் இருந்து தமது தென்னம் தோப்புக்களை பாதுகாப்பதற்காக வெளிச்சம் ஊட்ட வேண்டிய நிலைக்கு தோப்பு உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதற்காக மின்சாரத்தை பெறும் பொருட்டு சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக குறித்த உரிமையாளர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனாலும் தமக்குரிய மின்சாரத்தை வழங்காமல் மின்சாரசபை காலதாமதம் மேற்கொள்வதாக அவர்கள் கூறுகின்றனர். ஆகவே அரசாங்கம் தமக்கு மின்சாரத்தையாவது பெற்றுக்கொடுத்து தென்னம் உற்பத்தியை அதிகரிக்க உதவுமாறு சம்மந்தப்பட்டவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இல்லையேல் தாங்கள் கஷ்டப்பட்டு உருவாக்கிய தென்னம் தோப்பினை கைவிட்டு வெளியேற வேண்டிவரும் எனவும் கவலையுடன் தெரிவித்தனர்.
இதேநேரம் அருகில் உள்ள களப்பில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதையும் இங்கு காண முடிகின்றமை குறிப்பிடத்தக்கது.