இலங்கை

அரசுக்கு எதிராக 32 சிவில் அமைப்புக்கள் போர்க்கொடி – கொரோனா தடுப்பு என்ற பெயரில் மக்களின் கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்காதீர் என கோட்டாவுக்குக் கடிதம்

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் என்ற பெயரில் நாட்டு மக்களின் கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்க அரசு முயற்சிக்கின்றது. இதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.”

– இவ்வாறு 32 சிவில் அமைப்புக்கள்  ஒன்றிணைந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நேற்று விசேட கடிதம் அனுப்பி வைத்துள்ளன.

 

‘தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளில் மறைந்து கருத்து வெளியிடல் மற்றும் எதிர்ப்புத் தெரிவித்தல் உரிமையை ஒடுக்குதல் ஆகாது’ எனத் தலைப்பிட்டு அந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

கொரோனாத் தொற்றை இலங்கையை விட சிறப்பாக கட்டுப்படுத்தியுள்ள நாடுகள்  எந்த வகையிலும் இத்தகைய ஒடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்பதைச் சுட்டிக்கட்டியே இந்தக் கடிதம் அனுப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“தங்களுக்கு நியாயமான நிவாரணம் கிடைக்கவில்லை எனக் கம்பளைப் பகுதியில்  தொலுவ மக்கள் அமைதி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். அதன் பின்னர் அந்த ஆர்ப்பாட்டத்தை   ஏற்பாடு செய்தமைக்காக பேராதெனியப் பொலிஸார் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

அவர் கடந்த 10ஆம் திகதி கண்டி நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு எதிர்வரும் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக  அசெளகரியங்களை எதிர்நோக்கும் மக்கள்  தமது கருத்துக்களை, எதிர்ப்புக்களை  வெளிப்படுத்துவதற்கான உரிமை, தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் என்ற பெயரில் பறிக்கப்படுவதாகத் தெரிகின்றது.

 

மேற்சொன்ன கைதுகூட அத்தகைய நடவடிக்கையாகவே நாம் பார்க்கின்றோம்.  கடந்த காலங்களில் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை வெளியிட்ட பலர் கைதுசெய்யப்பட்ட நிலையில், தொடர்ந்தும் அத்தகைய கைதுகள் இடம்பெறும் என  உயர் பொலிஸ் அதிகாரிகள் ஊடகங்கள் ஊடாக பிரசித்தமாகவே அச்சுறுத்துகின்றனர்.

நிவாரணம் வழங்கும்  நடவடிக்கைகள் உரிய முகாமைத்துவத்துக்கு அப்பால் இடம்பெறும்போது மக்கள் எதிர்ப்புக்களை வெளியிட்டால் அவர்களை ஒடுக்குவதை விடுத்து அந்த எதிர்ப்புகளுக்கான காரணத்தைக் கண்டறிந்து அதற்குத் தீர்வையே பெற்றுக்கொடுக்க வேண்டும்.

 

இவ்வாறான தொற்று நோய் பரவல் கால கட்டத்தில்  நியாயமான அடிப்படைகளின் கீழ் பொதுமக்களின் சில உரிமைகள் மீறப்படுதல் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளமை தெளிவானதே.  உதாரணமாக பொதுமக்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கான உரிமை இவ்வாறான சந்தர்ப்பங்களில்  தடுக்கப்படுவது நியாயமானதே.  எனினும், கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம்,  எதிர்ப்பு வெளிப்படுத்தல் சுதந்திரம் ஆகியவற்றை ஒடுக்குவது மிக அபாயகரமான  நிலைமையாகும்.

இது சர்வாதிகார அறிகுறிகளுடன் கூடிய ஒரு அதிகார வர்க்க அரசின் நடவடிக்கையாகும்.  இலங்கையை விட மிகச் சிறப்பாகக் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்திய எந்த நாடும், மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் செயற்படவில்லை.

 

தொலுவ பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, அப்பகுதி மக்கள்  ஊடகங்கள் முன்,  தமக்கு அரசு ஊடாக எந்த நிவாரணங்களும் கிடைப்பதில்லை என்பதையே கூறினர்.

அப்பகுதிக்குக் கிடைக்கும் நிவாரணம் தெரிந்தெடுக்கப்பட்ட சிலரையே சென்றடைவதாக அவர்கள் கூறினர்.  தாம் பெரிதும் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளதாக அவர்கள் கூறினர்.  இவ்வாறான நிலைமை தொலுவ பகுதியில் மட்டுமன்றி நாட்டின் பல பகுதிகளிலும் உள்ளமை எமது அமைப்புக்களால் அவததானிக்கப்பட்டுள்ளன.

அரசு கொடுக்கும் நிவாரணம் உரிய மக்களிடம் சென்றடைவதில்லை என்ற குற்றச்சாட்டு தற்போதும் உள்ளது.  அத்துடன் அத்தியாவசியப் பொருட்களைப் பகிர்ந்தளிக்கும் செயற்பாடுகளும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

 

அரச ஊழியர்களின் கடன் தவணைக் கட்டணம் அறவிடப்படமாட்டாது எனக் கூறப்பட்டாலும்  அந்த வாக்குறுதி சரியாக நிறைவேற்றப்படவில்லை.  மரக்கறி விவசாயிகளின் உற்பத்திகளை கொள்வனவு செய்யும் திட்டங்களிலும் பாரிய குறைப்பாடுகள் உள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 

இவ்வறான நிலையில் மக்களிடையே எதிர்ப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியாது.  அரசு அவ்வாறான  சந்தர்ப்பத்தில் கருத்துக்களையும் எதிர்ப்புக்களையும் ஒடுக்குவதை விடுத்து,  அதற்கான காரனிகளை கண்டறிந்து உரிய தீர்வுகளைக் கொடுக்க வேண்டும். தமக்கு நியாயத்தைக் கோரி ஆர்ப்பாட்டம் செய்யும் மக்கள் கூட்டத்தை அரசு  தனது எதிராளிகளாக நோக்கக்கூடாது.  அத்துடன் கடந்த ஏப்ரல் 10ஆம் திகதி கைதானது பாதிக்கப்படும் மக்கள்  கூட்டா இணைந்து எதிர்ப்பு வெளியிடக் கூடாது என மிரட்டும் வகையிலானது.

 

எனவே, இந்த நிலைமையின்போது,   கருத்து வெளிப்பாடு மற்றும் எதிர்ப்பை வெளிப்படுத்தும் அடிப்படை உரிமையை  பாதுகாக்குமாறும்,  ஒடுக்குதல் நடவடிக்கைகளுக்குப் பதிலாக பாதிக்கப்பட்ட மக்களின்  பிரச்சினைகளுக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாரும்  கோருகின்றோம்” – என்றுள்ளது.

 

இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை தொழில் மற்றும் பொது ஊழியர் சங்கம், இலங்கை அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் சங்கம், நீர்ப்பாசன பொது ஊழியர் சங்கம், அரச தொழிலாளர் தொழிற்சங்க கூட்டமைப்பு, மாகாண முகாமைத்துவ சேவை அலுவலர்கள் சங்கம், தேசிய அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம், ரயில்வே தரப்படுத்தப்பட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு , ரயில்வே ஊழியர் சங்கம், ரயில்வே தொழிலாளர் ஒன்றியம், ஊடக சேவை தொழிற்சங்க கூட்டமைப்பு, வணிக மற்றும் தொழில்துறை தொழிலாளர்கள் சங்கம், ஐக்கிய தொழிலாளர் கூட்டமைப்பு, ரெலிகொம் அனைத்து ஊழியர் சங்கம், தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அனைத்து ஊழியர் சங்கம், அரச தொழிற்சாலை ஊழியர் சங்கம், தேசிய அஞ்சல் சேவை ஒன்றியம், ஐக்கிய அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய  ஊழியர் தொழிற்சங்கம், இலங்கை தொழிற்சங்கக் கூட்டமைப்பு, வணிக மற்றும் கைத்தொழில் ஊழியர் சங்கம், இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம், ஐக்கிய பொதுத் தொழிலாளர் சங்கம், இலங்கை தொழில்சார் ஊடகவியலாளர்கள்  சங்கம், சுதந்திர ஊடக இயக்கம், இணைய ஊடக நடவடிக்கை இயக்கம், கைதிகள் உரிமைகள் தொடர்பிலான குழு, இலங்கை இளம் ஊடகவியலாளர்களின்  சங்கம், நிலம் மற்றும் விவசாய சீர்திருத்த நடவடிக்கை இயக்கம் ஆகியன இணைந்தே குறித்த கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker