இந்தியா, பங்களாதேஷ் முதல் டெஸ்ட் நாளை – பகலிரவுப்போட்டிக்கும் கடும் பயிற்சி

சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி நாளை இந்தூரில் ஆரம்பிக்கின்றது.
இந்தத் தொடரின் இரண்டாவது போட்டி, எதிர்வரும் 22 ஆம் திகதி கொல்கத்தாவில் பகலிரவாக இடம்பெறவுள்ளது. இந்திய அணி விளையாடும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி என்பதால் இது வரலாற்று முக்கியத்துவம் பெறுகின்றது.
இதற்கென இந்திய வீரர்கள் கடும் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். முதல் டெஸ்டிற்கும் இரண்டாவது டெஸ்டிற்கும் இடையிலான இடைவெளி மிகக்குறைவாக இருப்பதால் இந்தூரிலேயே இளஞ்சிவப்பு பந்தில் பயிற்சி எடுக்க இந்தியா விரும்பியது.
இதனால் மாலை 5 மணி முதல் 6 மணி வரை வெளிச்சத்திற்கு கீழ் பயிற்சி எடுக்க வேண்டும் எனவும் அதற்கு ஏற்பாடு செய்து தரும்படி மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கத்திடம் கேட்டுக்கொண்டது. அதன்பேரில் அவர்கள் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.
பொதுவாக இந்தியாவின் முக்கியமான நகரங்களில் இரவு பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். இதனால் பனியில் பந்து ஈரமாகிவிட்டால், பந்து வீச்சாளர்களுக்கு சிரமத்தை கொடுக்கும்.
இதனைக் கருத்தில் கொண்டு, பிற்பகல் 02 மணி முதல் இரவு 09 மணி வரை இடம்பெற வேண்டிய போட்டியை பகல் ஒரு மணியில் இருந்து இரவு 8 மணி வரை நடத்த பெங்கால் கிரிக்கெட் சங்கம் பிசிசிஐ-க்கு வேண்டுகோள் விடுத்தது.
இதை பிசிசிஐ ஏற்றுக் கொண்டதால் கொல்கத்தா டெஸ்ட் போட்டி நேரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.