அதிகரித்துக்கொண்டே செல்லும் மரணங்கள்: அமெரிக்கா, பிரான்ஸில் ஒரேநாளில் ஆயிரங்களைக் கடந்தது

உலகெங்கும் பாரிய மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் பரவலால் இதுவரை பல்லாயிரக் கணக்கானவர்கள் மரணித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தாக்கம் சீனாவில் ஆரம்பித்து ஏறக்குறைய ஐந்து மாதங்கள் ஆகின்றபோதும் அதன் தாக்கம் இன்னும் குறைவதாகத் தெரியவில்லை. மாறாக உலகின் பல நாடுகளில் குறித்த வைரஸ் வீரியமாகப் பரவிவருகின்றமையினையே அவதானிக்க முடிகின்றது.
அதனடிப்படையில், இன்று வரையான காலப்பகுதியில், குறித்த வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உலகளாவிய ரீதியில், 59 ஆயிரத்து 172 பேர் மரணித்துள்ளனர்.
மேலும் 10 இலட்சத்து 98 ஆயிரத்து 762 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களில் 2 இலட்சத்து 28 ஆயிரத்து 923 பேர் இதுவரை குணப்படுத்தப்பட்டுள்ளனர்.
சீனாவில் தோற்றம்பெற்ற குறித்த வைரஸானது அங்கு கடந்த மாதங்களில் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது அதன் தாக்கம் ஐரோப்பிய நாடுகளில் நிலைகொள்ளத் தொடங்கியுள்ளது.
அதனடிப்படையில், நேற்று அதிகூடிய பாதிப்பினை பிரான்ஸ் எதிர்கொண்டுள்ளது. பிரான்சில் நேற்று ஒரேநாளில் மட்டும் ஆயிரத்து 120 பேர் மரணித்துள்ளனர். குறித்த மரண எண்ணிக்கையுடன் சேர்த்து பிரான்சில் மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 507 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், அந்நாட்டில் நேற்று ஒரேநாளில் மட்டும் 5 ஆயிரத்து 233 பேர் புதிய நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இதுவரை பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 64 ஆயிரத்து 338 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, பிரான்சில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி குணமடைந்தவரக்ளின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 8 ஆகக் காணப்படுகின்றது.
இதேவேளை, குறித்த வைரஸ் பாதிப்பினால் கடந்த சில நாட்களாகவே அமெரிக்கா கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றது. அதனடிப்படையில் அமெரிக்காவில் நேற்றைய தினம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 321 ஆகப் பதிவாகியுள்ளது. அங்கு இதுவரையான காலப்பகுதியதில் 7 ஆயிரத்து 392 பேர் குறித்த வைரஸ் தாக்கத்துக்கு இலக்காகி மரணமாகியுள்ளனர்.
இதேவேளை, நேற்றைய தினம் குறித்த வைரஸ் தாக்கத்துக்கு இலக்கான 32 ஆயிரத்து 284 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 77 ஆயிரத்து 161 ஆக உயர்வடைந்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் இதுவரை நோய்த்தொற்றுக்கு இலக்கானவர்களில் 12 ஆயிரத்து 283 பேர் குணமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் குறித்த வைரஸ் பரவலின் வீதம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அங்கு எதிர்வரும் நாட்களில் உயிரிழப்புகளின் வீதம் அதிகரிக்கும் என ஏற்கனவே எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கப் பிரஜைகளில் பலரை இழக்க நேரிடும் என ஏற்கனவே அந்நாட்டு அரசாங்கம் மற்றும் சுகாதாரத் துறையினரால் எச்சரிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் அங்கு நாடளாவிய முடக்கம், அவசரகால நிலைப் பிரகடனம் உள்ளிட்ட பல ஆயத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் மற்றுமொரு ஐரோப்பிய நாடான ஸ்பெயினில், நேற்றைய தினம் கொரோனா வைரஸ் பரவலால் 850 உயிரிழப்புகள் பதிவாகியுள்ள நிலையில் அங்கு ஏற்பட்டுள்ள மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 198 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை ஸ்பெயினில், ஒரு இலட்சத்து 19 ஆயிரத்து 199 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ள அதேவேளை, நேற்றைய தினம் மட்டும் குறித்த தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 134 ஆகப் பதிவாகியுள்ளது. இதேவேளை, அங்கு இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் 30 ஆயிரத்து 513 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
அத்துடன், ஜேர்மனியிலும் கொரோனா வைரஸ் வெகுவாகப் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. அதனடிப்படையில், வைரஸ் தாக்கத்திற்கு இலக்காகி ஜேர்மனியில் நேற்று மாத்திரம் 168 பேர் மரணமடைந்துள்ளனர்.
இதேவேளை தொடர்ச்சியாக பலத்த பாதிப்புக்கு உள்ளாகி வரும் இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 766 பேர் குறித்த வைரஸ் பாதிப்புக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர். குறித்த எண்ணிக்கையுடன் சேர்த்து அங்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 681 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், நேற்றைய தினம் இத்தாலியில் 4 ஆயிரத்து 585 புதிய நோய்த் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 19 ஆயிரத்து 827 ஆகக் காணப்படுகிறது.
இதுவரை அங்கு 19 ஆயிரத்து 758 பேர் வைரஸ் தொற்றில் இருந்து குணப்படுத்தப்பட்டு வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அத்துடன் அங்கு பாதிப்புக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 91 ஆயிரத்து 159 ஆக உயர்வடைந்துள்ள அதேவேளை, நேற்றைய தினம் மாத்திரம் பதிவான புதிய நோயாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 365 ஆகக் காணப்படுகிறது.
இதுவரையில் ஜேர்மனியில் குறித்த நோய்க்கு இலக்காகி 6 ஆயிரத்து 365 மரணித்துள்ள அதேவேளை இதுவரையில் 24 ஆயிரத்து 575 பேர் குணமாகி வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கொரோனா வைரஸ் தோற்றம்பெற்ற நாடான சீனாவில் கொரோனா வைரஸின் தாக்கம் வெகுவாகக் குறைந்து வருவதை கடந்த சில வாரங்களாக அவதானிக்க முடிகிறது. அதனடிப்படையில் நேற்றைய தினம் குறித்த வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி சீனாவில் நான்கு மரணங்கள் பதிவாகியுள்ள அதேவேளை, மொத்த மரண எண்ணிக்கை 3 ஆயிரத்து 322 ஆகக் காணப்படுகிறது.
மேலும் இதுவரையில் அங்கு 81 ஆயிரத்து 620 மொத்த நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் பதிவான புதிய நோயாளர்களின் எண்ணிக்கை 31 ஆகக் காணப்படுகிறது.
இதேவேளை, கொரோனா வைரஸ் பாதிப்பினால் அதிகமாக அவதியுறும் நாடுகளில் ஒன்றாக பிரித்தானியா காணப்படுகின்றது. இதுவரை கொரோனா தாக்கத்துக்கு இலக்காகி அங்கு 3 ஆயிரத்து 605 பேர் இறந்துள்ள நிலையில் நேற்றைய தினம் அங்கு 684 மரணங்கள் பதிவாகியுள்ளன.
அத்துடன், நேற்றைய தினம் 4 ஆயிரத்து 450 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள அதேவேளை, அங்கு நோய்த்தொற்றுக்கு இலக்காகியுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 38 ஆயிரத்து 168 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும், பிரித்தானியாவில் இதுவரை நோய்த்தொற்றுக்கு இலக்காகியுள்ளவர்களில் 135 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நேற்றைய நிலைவரத்தின் பிரகாரம் இதுவரை துருக்கியில் 425 மரணங்களும் சுவிற்ஸர்லாந்தில் 591 மரணங்களும் பெல்ஜியத்தில் 1,143 மரணங்களும் நெதர்லாந்தில் 1,487 மரணங்களும் பதிவாகியுள்ளன.
இதேவேளை, குறித்த கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மற்றும் குறித்த வைரஸ் பரவலுக்கெதிரான மருந்தினைக் கண்டுபிடிக்கவென உலகின் பல நாடுகள் தீவிரமான முயற்சியில் ஈடுபட்டு வருகின்ற போதும் இதுவரை அவை எதுவும் பலனளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிலைமையானது உலகளாவிய ரீதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள அதேவேளை, உலகின் பல நாடுகள் தத்தமது நாட்டுப் பிரஜைகளை பாதுகாத்துக்கொள்ளும் வண்ணம் நாடளாவிய முடக்கம் மற்றும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.