அம்பாறையில் 13 வயது சிறுமி துஷ்பிரயோகம்: மூவர் கைது

வி.சுகிர்தகுமார்
அம்பாறை – ஆலையடிவேம்பு ,கண்ணகிபுரம் பிரதேசத்தில் 14 வயது சிறுமியுடன் இளைஞன் ஒருவன் குடும்பம் நடத்திய சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் மூவரையும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.எல்.ஏ.றஸீட் உத்தரவிட்டார்.
நேற்று முன்தினம் வியாழக்கிழமை (04.06.2020) மாலை பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே மேற்படி உத்தரவைப் பிறப்பித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலையடிவேம்பு கண்ணகிபுரம் பிரதேசத்தை சேர்ந்த 14 வயது சிறுமியை அதே பிரதேசத்தை சேர்ந்த 19 வயது இளைஞன் ஒருவன் காதலித்து சிறுமியுடன் நெருங்கி பழகியுள்ளான் இதனை அறிந்த சிறுமியின் அப்பாவும் இளைஞனின் அம்மாவும் இருவரையும் பதிவு திருமணம் செய்யாமல் குடும்பமாக வாழ அனுமதித்துள்ளனர். பதிவு திருமணம் செய்ய சிறுமிக்கு வயது போதாது என்பது பெற்றார்களுக்கு பின்பு தெரிய வந்ததையடுத்து சிறுமியை பிரித்து சிறுமியின் தகப்பன் அவரது சகோதரி வசிக்கும் பாலமுனை பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் சிறுமியை தங்க வைத்துள்ளார்.
சிறுமி பாலமுனை திராய்கேணி பிரதேசத்தில் வசித்து வரும் போது அப்பிரதேச பெண் ஒருவரால் சிறுமிக்கு எதிராக அக்கரைப்பற்று பொலிஸில்; முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டது.
இதனை விசாரிக்க சென்ற பொலிசாருக்கு சிறுமி இளைஞன் ஒருவனுடன் வாழ்ந்த கதை தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து பதிவுத்திருமணம் செய்யாமல் சட்டவிரோதமாக சிறுமியை இளைஞன் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் அக்கரைப்பற்று பொலிசார் இளைஞனையும் இச்சம்பவத்துக்கு உதவிய குற்றச்சாட்டில் இளைஞனின் அம்மாவையும்,சிறுமியின் அப்பாவையும் கைது செய்து விசாரணையின் பின் மூவரையும் மன்றில் ஆஜர்படுத்தினர்.பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணையை மேற் கொண்டுவருகின்றனர்.