பல்கலை அனுமதி விண்ணப்பம் – பாடசாலை அதிபரின் சான்றிதழ்கள் தேவையில்லை!


பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக பல்கலை அனுமதிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகள், விண்ணப்பம் கோரும் பாடசாலையிலிருந்து எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்க தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (திங்கட்கிழமை) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனைத் தெரிவித்தார்.
விண்ணப்பதாரர்கள் தேவையான ஆவணங்களை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பாடசாலை அதிபரின் சான்றிதழ்கள் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அத்தோடு விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ள கிராம அலுவலகரின் சான்றிதழ்களை தனியார் விண்ணப்பதாரர்கள் பெற வேண்டிய அவசியமில்லை என்றும் பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டார்.
பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு பாடசாலை கல்வி நவடிக்கைகள் மீண்டும் ஆரம்பமானதும் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கமுடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
விண்ணப்பங்களை சமர்ப்பிக்க காலக்கெடு ஜூன் 11 ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளதாகவும் ஒன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்றும் அவர் கூறினார்.



