அக்கரைப்பற்று பிரதேசத்தில் பலத்த காற்றால் பாரிய மரம் சரிந்து வீழ்ந்தது மூன்று பஸ்களுக்கும் பலத்த சேதம்…

வி.சுகிர்தகுமார்
அக்கரைப்பற்று பிரதேசத்தில் நேற்று மாலை (20) வீசிய பலத்த காற்றால் இலங்கை போக்குவரத்து சபையின் அக்கரைப்பற்று சாலையின் வீதி ஓரத்தில் இருந்த பாரிய மரம் சரிந்து வீழ்ந்தது.
இதனால் சாலையின் ஜாட் பகுதி உட்பட அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று பஸ்களும் பலத்த சேதமடைந்துள்ளதுடன் கடமையில் ஈடுபட்டிருந்த ஊழியர்களும் அதிஸ்டவசமாக உயிர் தப்பினர்.
அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று உள்ளிட்ட பிரதேசங்களில் நேற்று மாலை பலத்த காற்றும் மின்னலுடன் கூடிய மழையும் பெய்தது.
இதனால் சிறிது நேரம் மக்கள் பீதியடைந்தனர்.
இந்நிலையில் இலங்கை போக்குவரத்து சபையின் அக்கரைப்பற்று சாலையின் வீதி ஓரத்தில் இருந்த பாரிய மரம் சரிந்து வீழ்ந்துள்ளது. மரம் சரிந்து விழும் போது அங்கு கடமையில் ஈடுபட்ட ஊழியர்கள் சிதறியடித்து வெளியேறியுள்ளனர். இதனால் அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
ஆனாலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று பஸ்களும் சேதமடைந்தன. அத்தோடு வாகனங்கள் திருத்தும் ஜாட்டின் ஒரு பகுதி முற்றாக சேதமடைந்துள்ளதுடன் வானம் திருத்தும் ஆயுதங்கள் வைக்கப்பட்டிருக்கும் கட்டடமும் இடிந்து வீழ்ந்துள்ளது.
அக்கரைப்பற்று சாலையில் வாகன தரிப்பிட வசதிகள் போதுமானதாக இல்லாத நிலையில் இவ்வாறான சம்பவம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.