இலங்கை

அப்போது புலிப் பூச்சாண்டி, தற்போது சீனப் பூச்சாண்டி!

தமிழ் மக்களுக்கு புலிப் பூச்சாண்டி காட்டி அரசியல் செய்தவர்கள் தற்போது சீனப் பூச்சாண்டியைக் காட்டித் தங்களுடைய போலி அரசியலை தக்க வைத்துக் கொள்ள முயற்சித்து வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள கடற்றொழில் அமைச்சர் டகளஸ் தேவானந்தா, உள்ளூர் உற்பத்திகளில் சார்ந்திருக்கும் பொருளாதாரத்தினை உருவாக்கும் வகையிலேயே கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள் அமைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், கடலட்டை போன்ற நீர் வேளாண்மைச் செயற்பாடுகளை வடக்கு கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் விஸ்தரித்து, அடுத்த 3 ஆண்டுகளில் சுமார் 40,000 நேரடி வேலை வாய்ப்புக்களையும் சுமார் 200 பில்லியனுக்கும் மேற்பட்ட அந்நியச் செலாவணியை பெற்றுக் கொள்வதையும் இலக்காக கொண்டு செயற்பட்டு வருவதாகவும் கடற்றொழில் அமைச்சர் தெரிவித்தார்.

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக பிரதான எதிர்க் கட்சிகளினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பாக இன்று (21) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

“எரிபொருள் விலையேற்றம் என்பது அமைச்சர் உதய கம்மன்பிலவின் தனிப்பட்ட தீர்மானம் அல்ல. இந்த தீர்மானம் தற்போதைய அரசாங்த்தின் கூட்டுத் தீர்மானமாகும். எனவே, நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்பது நேரத்தையும் மக்களின் வரிப் பணத்தினையும் வீண் விரயமாக்கும் செயலாகும்.

ஒரு நாட்டின் எரிபொருள் விலையேற்றமானது அந்நாட்டின் அனைத்துப் பொருட்களினதும் விலையேற்றத்துக்குக் காரணமாகும் என்பதை நான் புதிதாகக் கூறித் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.

எமது நாடு இன்று பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கியதொரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலைப்பாடானது எமது நாட்டுக்கு மாத்திரம் நிகழ்ந்துள்ளதொரு நிலையல்ல.

கொவிட் – 19 அனர்த்த நிலை காரணமாக முழு உலகமே இன்று பொருளாதார நிலையில் பாரிய பாதிப்புகளை கண்டு வருகின்றன.

கடந்த ஆட்சியின் தூர நோக்கற்ற பொருளாதார கொள்கையானது எமது நாட்டு கஜானாவை துடைத்து வைத்திருந்த நிலையில்தான் நாம் இந்த கொவிட் – 19 அனர்த்தத்திற்கும் முகங் கொடுக்க வேண்டிய நிலையேற்பட்டது என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.

இத்தகைய நிலைமைகளின் முன்பாக எமது மக்கள் பொருளாதார ரீதியில் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்ற சந்தர்ப்பத்தில், எரிபொருளின் விலையேற்றமானது மரத்திலிருந்து விழுந்தவனை மாடேறி மிதித்த கதையைப் போன்றதாகி விட்டது என்பதை ஏற்றுக் கொள்ளவே வேண்டும்.

அதேநேரம், எரிபொருள் விலையேற்றம் காரணமாக எமது கடற்றொழிலாளர்கள் தொழில் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதையும் இந்த நாட்டின் கடற்றொழில் அமைச்சர் என்ற வகையில் நான் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

அதேவேளை, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் துறைசார் அமைச்சர் உதயகம்மன்பில் ஆகியோருடன் கலந்துரையாடி 35 ரூபாயினால் அதிகரிக்கப்பட இருந்த மண்ணெண்ணையின் விலையை 7 ரூபாயினால் மாத்திரமே அதிகரிக்கச் செய்துள்ளோம்.

எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்ற போதிலும், எமது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களது ஊடகப் பிரிவானது கடந்த மாதம் 13 ஆம் திகதி வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையில், இந்த எரிபொருள் விலையேற்றம் குறித்து நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தி இருந்ததையே நான் இங்கு மீண்டும் நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

இலங்கையானது எரிபொருளுக்கென மிக அதிகளவிலான அந்நிய செலாவணியை செலவிடுகின்ற ஒரு நாடு மட்டுமல்ல, இத்தகைய இறக்குமதிகளின் மூலமாக போக்குரத்து சேவைகள், மின்சார உற்பத்தி, கைத்தொழில் நிலையங்கள் போன்றவற்றை செயற்படுத்துகின்ற ஒரு நாடாகவும் உள்ளது.

இறக்குமதி மீது தங்கியிருக்கின்ற எமது நுகர்வுக் கலாசாரத்தை உற்பத்திகள் மீது தங்கியிருக்கக் கூடிய நுகர்வுக் கலாசாரமாக மாற்றியமைக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனம் முதற்கொண்டு, இந்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகள் வரை இந்த நாட்டின் உற்பத்தி பொருளாதாரத்தையே வலியுறுத்திள்ளன. அதனையே நாம் செயற்படுத்தி வருகின்றோம்.

கடற்றொழில் அமைச்சர் என்ற வகையில், இயன்றளவில் கடற்றொழிலையும், நன்னீர் சார்ந்த வோண்மைத் துறைகளையும் மேலும் மேலும் பரவலாக வளர்த்தெடுத்து உற்பத்திப் பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கின்ற நடவடிக்கைகளை நான் இடைவிடாது மேற்கொண்டு வருகின்றேன்.

சாதிக்க துணிந்தவனுக்கு சமுத்திரம் கூட இடுப்பளவு நீராகும். போதிக்க மட்டும் தெரிந்தவனுக்கு இடுப்பளவு நீரும் சமுத்திர நீராகவே தென்படும். கடந்த ஆட்சிக்கு நல்லாட்சி என்று பெயர் சூட்டி தமிழ் மக்களின் தலைகள் மீது மிளகாய் அரைத்தவர்கள் எதை சாதித்தார்கள்?

அடிக்கல் நாட்ட வந்த ஆட்சியாளர்களை கண்டவுடன் குனிந்து கும்பிட்டு பல்லிளித்து மட்டும் நின்றார்கள். ஒவ்வொரு வரவு செலவு திடத்தை ஆதரித்து வாக்களிக்கும் போதும் பணப்பெட்டிகளை வாங்கிக்கொண்டு பெட்டிப்பாம்புகளாக கைகட்டி அடங்கிக்கிடந்தார்கள்.

இந்தவிறகுக் கட்டை விடுதலை வீரர்கள், கிளிநொச்சி புலிநொச்சியாக இருந்த காலத்தில் 75 கள்ள வாக்குகளைப் போட்டதாக ஒப்புக்கொண்டார்கள். அவ்வாறான ஒரு அரசியல்வாதியாக நான் ஒருபோதும் எமது மக்களை ஏமாற்றப் போவதில்லை.

அந்தவகையில், அனைத்து உற்பத்தித் துறைகளும் மேலோங்கும் நிலை விரைவில் ஏற்பட வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும். அதேநேரம், மாற்று எரிபொருட்கள் தொடர்பிலும் எமது அரசு அதிக அவதானம் செலுத்தி வருகின்றது.

எரிபொருள் விலையேற்றம் காரணமாக எமது நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலும் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுதான் வருகின்றன. கடந்த பெப்ரவரி மாதத்தில் மாத்திரம் மூன்று தடவைகள் அங்கு எரிபொருள் விலை ஏற்றப்பட்டுள்ளது.

இத்தகைய நிலையில் இந்தியா பெற்றோலிய எரிபொருள் மற்றும் உள்நாட்டு எதனோல், உயிரியல் இயற்கை எரிவாயு, திரவ இயற்கை எரிவாயு மற்றும் ஹைட்ரஜன் எரிபொருட்கள் அடங்கிய இயற்கை எரிபொருளைக் கொண்ட கலப்பு பிளக்ஸ் இயந்திரங்களின் பாவனையை வாகனங்களுக்கென ஊக்குவித்து வருகின்றது. இந்த முறைமையனது தற்போது அமெரிக்கா, கனடா, பிரேசில் போன்ற நாடுகளில் பாவனையில் உள்ளது. அவை தொடர்பாகவும் நாம் எதிர்காலத்தில் கவனம் செலுத்த வேண்டும்´ என்று கடற்றொழில் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker