ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளரை கைது செய்யுமாறு பிடியாணை – ஆணைக்குழு கண்டனம்!

அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் பேர்ள். கே. வீரசிங்கவை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
நீதிமன்றத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) ஆஜராகுமாறு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்ட போதிலும் அவர் ஆஜராகாமையினால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் ஆஜராக முடியாமை குறித்து மன்றுக்கு அறிவிக்காமையினால் அதனை நீதிமன்றத்தை அவமதிக்கும் செயற்பாடாகத் தீர்மானித்து விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றம் இந்த பிடியாணையை பிறப்பித்துள்ளது.
அலி ரொஷான் எனப்படும் நிராஜ் ரொஷான் உள்ளிட்ட 8 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக அரசியல் பழிவாங்கல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
அது தொடர்பான ஆவணங்கள் குறித்து சாட்சியமளிப்பதற்கு நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளருக்கு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஆணைக்குழு அதிகாரி ஒருவரை சாட்சியாளராக அழைப்பதோ அல்லது அவருக்கு எதிராக அறிவித்தல் பிறப்பிப்பதோ சட்டத்திற்கு புறம்பானது என ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகள், அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகளை ஜனாதிபதிக்கு மாத்திரம் தெரியப்படுத்துவதற்கான அதிகாரம் காணப்படும் நிலையில், ஆணைக்குழுவின் செயலாளருக்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பது சட்டத்திற்கு புறம்பானதாக அமைந்துள்ளதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.