நியூஸிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட்: மழை குறுக்கீட்டினால் தப்பியது இந்தியா!

நியூஸிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இந்தியா அணி, 55 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 122 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை மழைக் குறுக்கிட்டது. இதனால், இன்றைய ஆட்டம் நிறைவுக்கு வந்தது.
ஆட்டநேர முடிவில் அஜிங்கிய ரஹானே 38 ஓட்டங்களுடனும், ரிஷப் பந்த் 10 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.
வெலிங்டன் மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய இந்தியா அணி, ஆரம்பமே சற்று தடுமாற்றத்தை எதிர்கொண்டது.
இந்தியா அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான பிரீத்வி ஷா மற்றும் மாயங் அகர்வால் ஆகியோர் 16 ஓட்டங்களை பகிர்ந்திருந்த வேளை, பிரீத்வி ஷா 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய புஜாரா 15.3ஆவது ஓவரில் 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேற, எதிர்பார்ப்பு மிக்க வீரரான அணித்தலைவர் விராட் கோஹ்லி 2 ஓட்டங்களுடன் ஏமாற்றினார். இதனைத் தொடர்ந்து நிதான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய மாயங் அகர்வாலும் 34 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதற்கமைய மழைக் குறுக்கீடினால் போட்டி இடைநிறுத்தப்பட இந்தியா அணி, 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 122 ஓட்டங்களை பெற்றது.
நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சில், கெய்ல் ஜேமீஸன் 3 விக்கெட்டுகளையும், டிம் சவுத்தீ மற்றும் ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இன்னும் 5 விக்கெட்டுகள் மீதமிருக்க போட்டியின் இரண்டாவது நாளை, இந்தியா அணி நாளை தொடரவுள்ளது.